உத்தரப் பிரதேசத்தின் சஹாரன்பூரில், ஒரு 5 பேர் கொண்ட குடும்பம் மரணத்தின் பிடியில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பிய சம்பவம் நடந்துள்ளது. செவ்வாய்க்கிழமை அதிகாலை 1 மணியளவில், ஜூகேடி கிராமத்தைச் சேர்ந்த வீரேந்திரா, தனது உடல்நலம் பாதிக்கப்பட்ட தாயை கங்கோவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது, அவர்கள் பயணித்த கார் 11 அடி ஆழமுள்ள பள்ளத்தில் விழுந்தது. இந்தப் பள்ளம், நகராட்சி ஒப்பந்தக்காரரால் தண்ணீர் எடுக்கும் பணிக்காக தோண்டப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

வீரேந்திராவுடன் அவரது மனைவி, குழந்தைகள் மற்றும் சகோதரரும் காரில் இருந்தனர். மங்கலான வெளிச்சத்தில் பயணித்தபோது, எந்த எச்சரிக்கை அறிவிப்போ அல்லது தடுப்பு வேலிகளோ இல்லாமல், நடுவழியில் தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் கார் திடீரென விழுந்தது.

அதிர்ஷ்டவசமாக, குடும்பத்தினர் அனைவரும் பெரிய காயங்களின்றி காரில் இருந்து தப்பினர். உள்ளூர் மக்களின் உதவியுடன் அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு, உடல்நலம் பாதிக்கப்பட்ட தாய் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

சம்பவ இடத்தில் இருந்து வெளியாகியுள்ள வீடியோவில், காரை கிரேன் மூலம் மண்ணு கலந்த நீரில் இருந்து வெளியேற்றுவது பதிவாகியுள்ளது. இந்தப் பள்ளம் எச்சரிக்கை இல்லாமல் விடப்பட்டதற்கு நகராட்சி ஒப்பந்தக்காரரின் அலட்சியமே காரணம் என கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.