கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று வெளிச்சம் பார்த்துள்ளது. மலுமிச்சம்பட்டியை சேர்ந்த பாலமுருகன் (45), நெல்லை பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்த முருகப்பெருமாள் (26) ஆகியோர் கோவை செட்டிப்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு சென்று, “நாங்கள் குடிபோதையில் ஜெயராமன் என்பவரை கொன்று கிணற்றில் வீசிவிட்டோம்” என்று சரண் அடைந்தனர். போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்று, கிணற்றில் இருந்த ஜெயராமனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
இதையடுத்து, சரண் அடைந்த இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். முதலில் அவர்கள் கூறிய தகவல்கள் முன்னும் பின்னும் முரண்பட்டதால், போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. தொடர்ந்து கிடுக்கிப்பிடி விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளிச்சம் பார்த்தன. ஜெயராமன், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணியாற்றி வந்தவர்.
இதே நிறுவனத்தில் டிரைவர்களாக இருந்த பாலமுருகன், முருகப்பெருமாள் ஆகியோருடன் நெருங்கிய நட்பு இருந்ததால், அடிக்கடி இரவு நேரங்களில் ஒன்றாக அமர்ந்து மது அருந்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இதற்கிடையில், ஜெயராமன் பண ஏமாற்றத்தில் ஈடுபட்டதாக நிறுவனம் விசாரணை நடத்தி வந்தது.
சம்பவத்தன்று மூவரும் மது அருந்தும் போது தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் கைகலப்பாக மாற, வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட ஜெயராமன் திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்தார். இதனால் பயந்த இருவரும், சம்பவம் குறித்து தனியார் நிறுவனத்தினருடன் பேசிய பிறகு, உடலை காரில் கோவைக்கு கொண்டு வந்து கிணற்றில் வீசியதாக போலீசார் கூறினர்.
மேலும், இந்த வழக்கில் நுங்கம்பாக்கத்தை சேர்ந்த ஒரு தொழில் அதிபருக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், தனிப்படை போலீசார் சென்னைக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெயராமன் மரணத்தின் உண்மையான காரணம் விசாரணைக்கு பிறகே தெரிய வரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
