கடற்கரையில் கிடந்த சிறிய அளவிலான ஆக்டோபஸ் ஒன்றைப் பத்திரிகையாளர் ஆண்டி மெக்கானெல் என்பவர் கையில் எடுத்து விளையாடியதுடன் அதனைப் படம்பிடித்துச் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். ஆனால் அந்த உயிரினம் உலகிலேயே அதிக நச்சுத்தன்மை கொண்ட நீல வளைய ஆக்டோபஸ் என்பதும், அது கடித்திருந்தால் அவர் சில நிமிடங்களிலேயே உயிரிழந்திருக்கக் கூடும் என்பதும் பின்னர் தெரியவந்தது.
இந்த ஆக்டோபஸின் எச்சில் சுரப்பிகளில் இருக்கும் டெட்ரோடோடாக்சின் என்ற நச்சுப்பொருள் மனிதனின் நரம்பு மண்டலத்தை முடக்கி மூச்சுத் திணறலை ஏற்படுத்தி மரணத்தை விளைவிக்கக் கூடியது. மிகவும் சிறியதாகவும் அழகாகவும் காணப்படும் இந்த ஆக்டோபஸ் கடித்தால் தொடக்கத்தில் வலி தெரியாது என்பதால் அந்த ஆபத்தை எவரும் எளிதில் உணர முடியாது.
View this post on Instagram
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்தத் திகிலூட்டும் காணொலி, கடலில் காணப்படும் தெரியாத உயிரினங்களைக் கையாள்வதில் உள்ள பேராபத்தை உணர்த்துவதுடன் இயற்கையில் அழகாகத் தெரியும் அனைத்தும் பாதுகாப்பானது அல்ல என்ற எச்சரிக்கையையும் விடுத்துள்ளது.
