சென்னையை அடுத்த புழல் பகுதியை சேர்ந்தவர் சங்கீதா. இவர் சென்னை மாநகராட்சியின் 31 வது வார்டு கவுன்சிலராக உள்ளார். இந்நிலையில் அவரது குடும்பத்துடன் பொன்னேரி அடுத்த சிங்கிலி மேடு கிராமத்தில் உள்ள கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது பொன்னேரி பகுதியில் உள்ள ஒரு தனியார் குடிநீர் சுத்திகரிப்பு ஆலையில் குடிநீர் பாட்டில்களை மொத்தமாக வாங்கியுள்ளார்.
பின்னர் கோவிலில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது ஒருவர் தண்ணீர் குடிப்பதற்காக குடிநீர் பாட்டிலை திறந்த போது அதில் பல்லி இறந்த நிலையில் கிடந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் சம்பந்தப்பட்ட தனியார் குடிநீர் சுத்திகரிப்பு ஆலைக்கு சென்றுள்ளனர்.
அங்கு ஊழியர்களிடம் இது குறித்து கேட்டபோது அவர்கள் சரியான பதிலை அளிக்கவில்லை. அதனால் அப்பகுதியில் உள்ள ஏராளமான ஒன்றாக சேர்ந்து குடிநீர் ஆலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளனர். நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் சமாதானம் செய்துள்ளனர்.
