சென்னை வியாசர்பாடியை அடுத்த எம்.கே.பி. நகர், புது நகர், 7-வது தெருவைச் சேர்ந்தவர் குமாரின் மகன் சங்கர் (19). ஒரு காலத்தில் கல்லூரியில் படித்த சங்கர், படிப்பை பாதியில் விட்டுவிட்டு வீட்டிலேயே இருந்துவருகிறார். நேற்று சங்கரின் பிறந்த நாள் என்பதால், அவரது நண்பர்கள், “வந்துவிடு… கேக் வெட்டிட்டு, மது விருந்துடன் celebrate பண்ணலாம்” என அழைத்துள்ளனர்.

இதனை ஒப்புக்கொண்ட சங்கர், நேற்று இரவு நண்பர்கள் 10 பேருடன் கொடுங்கையூர் எருக்கஞ்சேரி கருணாநிதி சாலையில் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். பின்னர், அருகிலுள்ள கைலாசம் தெரு முட்புதர் பகுதிக்கு சென்று, நண்பர்கள் அனைவரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது, திடீரென, சங்கருடன் இருந்த சில நண்பர்கள், முன்விரோதம் காரணமாக தங்களிடம் மறைத்து வைத்திருந்த கத்தியால் சங்கரை பல முறை வெட்டியுள்ளனர்.

வெட்டு காயத்தோடு  சங்கர் தப்பி ஓட முயன்றபோதும், அவர்கள் விடாமல் ஓட ஓடி தலை, முகம், கை ஆகிய பகுதிகளில் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். ரத்த வெள்ளத்தில் பரிதாபமாகக் கிடந்த சங்கர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த கொடுங்கையூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, சங்கரின் உடலை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர்.

இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். முன்விரோதத்தை காரணமாகக் கொண்டு திட்டமிட்டு அழைத்து சென்று, மதுபோதையில் சங்கரை வெட்டிக் கொன்றது உறுதி ஆகியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

தற்போது போலீசார் தனிப்படை அமைத்து கொலையாளிகளை  வலைவீசிதேடிவந்த நிலையில் , சந்தேகத்தின் பேரில் மூவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொடூர சம்பவம், எம்.கே.பி நகர் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.