கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் பகுதியை சேர்ந்த தம்பதியினருக்கு 17 வயதுடைய மகள் உள்ளார். அவர் 12 ஆம் வகுப்பு முடித்துள்ளார். இந்நிலையில் அந்த தம்பதியினரின் வீட்டில் 60 பவுன் நகைகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து தனது மகளை அழைத்து விசாரித்த போது, தான் பள்ளியில் படிக்கும் போது இன்ஸ்டாகிராம் மூலம் இளைஞர் ஒருவரை காதலித்ததாகவும் அவர் அடிக்கடி பைக் வாங்குவதற்கும், தாயாரின் மருத்துவ செலவுக்காகவும் பணம் கேட்டு தொல்லை செய்து வந்ததாக கூறியுள்ளார்.

மேலும் பணத்தை தன்னுடைய தோழி ஒருவரின் மூலம் கொடுத்து அனுப்புமாறு கேட்டுள்ளார். அதனால் வீட்டில் உள்ள நகைகளை கொஞ்சம் கொஞ்சமாக தனது தோழி மூலம் கொடுத்து அனுப்பியதாக கூறியுள்ளார். இதனைக் கேட்ட பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அந்த இளம் பெண்ணின் தோழியை அழைத்து விசாரித்துள்ளனர்.

அப்போது சரியான பதிலை அந்த பெண் அளிக்காததால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் விசாரணையை தீவிரபடுத்தினர். இதனிடையில் அந்தத் தோழியின் தந்தை தனது வீட்டில் 8 வளையல், 2 தங்க சங்கிலிகள் இருப்பதாக கிட்டத்தட்ட 15 பவுன் நகைகளை காவல்துறையினரிடம் ஒப்படைத்தார்.

அதன் பின் நடத்திய கிடக்குப்பிடி விசாரணையில், அந்தத் தோழியின் தாயாரும் இச்சம்பவத்தில் தொடர்புடையது தெரியவந்தது. அதாவது தோழியின் தாயார் குழுக்கள் மூலம் அதிக கடனாளியாகியுள்ளார். அதனை கொடுக்க முடியாமல் சிரமப்பட்டு வந்த போது தனது மகளின் தோழி வசதி படைத்தவராக உள்ளதை கவனித்த தாய் தனது மகளின் உதவியுடன் அந்தப் பெண்ணை ஏமாற்ற திட்டமிட்டுள்ளனர்.

அதன்படி அந்த தோழி ஒரு ஆண் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கி மாணவியிடம் காதலன் போல் ஆசை வார்த்தை பேசி பழகி வந்துள்ளார். அதன் பின் தனக்கு பைக் வாங்கவும், தனது தாய்க்கு மருத்துவத்திற்கு பணம் தேவைப்படுவதாகவும் கூறி நகைகளை கொஞ்சம் கொஞ்சமாக வாங்கியுள்ளனர்.

மேலும் வாங்கிய நகைகள் மூலமாக தாய் தனது கடனை கொஞ்சம் கொஞ்சமாக அடைத்ததோடு மட்டுமல்லாமல், தங்களது குடும்பத் தேவைகளையும் நிறைவேற்றி வந்துள்ளனர் என்பது தெரியவந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில் காவல்துறையினர் அனைத்து உண்மைகளையும் தெரிந்து கொண்டனர் என்பதால் தங்களை கைது செய்து விடுவார்கள் என்ற பயத்தில் தாயும், மகளும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.

ஆனால் உடனே அவர்களை அவரது உறவினர்கள் மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது தொடர்பாக காவல்துறையின விசாரணை நடத்தி வருகின்றனர் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.