நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள சின்னஅரியாகவுண்டம்பட்டி பகுதியில் வசித்து வந்தவர் அருள்ஜோதி (வயது 35). கூலி வேலை செய்து வந்த இவர், கணவர் மாரிமுத்து பல ஆண்டுகளுக்கு முன்னர் மரணமடைந்ததால், இரு பெண் குழந்தைகளுடன் தனியாகவே வசித்து வந்தார்.
இந்நிலையில், மாரிமுத்துவின் தந்தை சேட்டு (வயது 65) கடந்த சில ஆண்டுகளாகவே மருமகளான அருள்ஜோதிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து தனது பெற்றோரிடம் புகார் கூறியதும், அவர் முள்ளுக்குறிச்சிக்கு மாறி சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் சேட்டு மீண்டும் நாமகிரிப்பேட்டைக்கு வந்துள்ளார். அன்று இரவு இறைச்சிக்கடையில் வேலை பார்த்து, பிறகு முள்ளுக்குறிச்சிக்கு திரும்பியவர், மறுநாள் மதியம் நேரில் அருள்ஜோதி வீட்டுக்குச் சென்றுள்ளார்.
அப்போது வீட்டில் தனியாக இருந்த அருள்ஜோதியிடம், தனது ஆசைக்கு இணங்குமாறு கட்டாயப்படுத்திய சேட்டு, அவர் மறுப்பு தெரிவித்ததால் கத்தியை எடுத்து வயிறு மற்றும் மார்புப் பகுதிகளில் பல முறை குத்தியுள்ளார். இதனால் அருள் ஜோதி அலறி துடித்தார்.
அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்தபோது, சேட்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தார். உடனடியாக அருள்ஜோதியை ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவசர சிகிச்சைக்கு பிறகு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட போது, செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பாக நாமகிரிப்பேட்டை போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான மாமனாரை தேடி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
