கணித உலகில் சீனிவாச ராமானுஜருக்குப் பிறகு இந்தியா தந்த ஒரு மிகப்பெரிய மேதை தான் வசிஷ்ட நாராயண சிங். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இவர், சிறு வயதிலேயே கணிதத்தில் அபாரத் திறமை கொண்டவர்.
அமெரிக்காவின் நாசா (NASA) விண்வெளி ஆய்வு மையத்தில் பணியாற்றிய போது, ஒருமுறை அங்கிருந்த கணினிகள் பழுதடைந்தன. அப்போது வசிஷ்ட நாராயண சிங் தனது கை விரல்களாலேயே செய்த கணக்கீடுகள், கணினிகள் சரிசெய்யப்பட்ட பின் பார்த்தபோது துல்லியமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. நிலவுக்கு மனிதனை அனுப்பும் ‘அப்பல்லோ’ திட்டத்திலும் இவர் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
ஆனால், இவ்வளவு பெரிய மேதையின் வாழ்க்கையில் விதி விளையாடியது. அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பிய அவருக்கு, ‘ஸ்கிசோஃப்ரினியா’ (Schizophrenia) எனப்படும் மனநல பாதிப்பு ஏற்பட்டது.
இதனால் அவரது திருமண வாழ்க்கை மற்றும் கல்விப் பணி இரண்டுமே சிதைந்து போனது. ஒருகட்டத்தில் ரயில் பயணத்தின் போது திடீரென காணாமல் போன அவர், பல ஆண்டுகள் கழித்துத் தனது சொந்த ஊரில் மிக ஏழ்மையான நிலையில், அடையாளம் தெரியாத அளவுக்குக் கண்டெடுக்கப்பட்டார்.
மத்திய அரசு அவருக்குப் மரணத்திற்குப் பின் ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கி கௌரவித்தது. ஒரு மாபெரும் அறிவியலாளர் போதிய கவனிப்பின்றி மறைந்தது இந்திய வரலாற்றில் ஒரு சோகமான பக்கமாகும்.
