உத்தரப் பிரதேசம் மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள சிறுவன் லக்‌ஷயா பிரதாப் சிங் (10), நேற்று மாலை 5 மணியளவில் வீட்டு அருகே விளையாடச் சென்ற நிலையில் வீடு திரும்பாமல் காணாமல் போனதாக அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். உடனடியாக களத்தில் இறங்கிய போலீசார், சிறுவனின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் மற்றும் காவல் நிலையங்களுக்கு அனுப்பி, தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

பேருந்து நிலையம், ரெயில்வே ஸ்டேஷன் உள்ளிட்ட இடங்களிலும் விசாரணை தொடரப்பட்டது. எந்த தகவலும் இல்லாத நிலையில், மாவட்ட எஸ்.பி. ஜிதேந்திர குமார் உத்தரவின்பேரில், ‘டோனி’ என்ற மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. சிறுவனின் சட்டையை மோப்ப நாயிடம் கொடுத்து தடம் பிடிக்கவைத்தனர். அதிரடியாக அந்த நாய், சிறுவனின் வீட்டின் மேல் மாடிக்கு சென்று, உள்ளே பூட்டப்பட்ட அறைக்கு முன் நின்று குறைத்தது.

போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, அங்கு பல மணிநேரமாக தேடப்பட்ட சிறுவன் ஓரமாக படுத்து தூங்கிக் கொண்டிருந்தது வியப்புக்குரியதாக இருந்தது. பின்னர் சிறுவனை எழுப்பி விசாரித்ததில், “வீட்டுப்பாடம் செய்யாததால் டியூசனுக்கு செல்ல பயந்து கொண்டு, யாருக்கும் தெரியாமல் மறைந்து தூங்கி விட்டேன்” என அவனது நிதானமான பதில் போலீசாரையை சிரிக்க வைத்தது. ஒருவழியாக தேடுதல் வேட்டை முடிந்து, சிறுவன் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

சரியான நேரத்தில் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டதாலும், இது போல ஒரு கூத்து வேடிக்கை ஆனதாகவும், பெரும் மன அழுத்தம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது என்றும் போலீசார் தெரிவித்தனர்.