உத்தர பிரதேச மாநிலம் பாலியா மாவட்டத்தில் உள்ள ஜிராபஸ்தி கிராமத்தில், பள்ளியில் படித்து வந்த இரு சகோதரி சிறுமிகள், மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த ஆஞ்சல் யாதவ் (வயது 15) என்பவர் 9-ம் வகுப்பிலும், அவரது தங்கை ஆல்கா யாதவ் (வயது 12) 6-ம் வகுப்பிலும் கல்வி பயின்று வந்தனர். இருவரும் தினமும் ஒன்றாக பள்ளிக்குச் சென்று, பள்ளி முடிந்த பிறகு வீட்டிற்கு நடந்து திரும்புவது வழக்கம்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, சாலையில் தேங்கி இருந்த மழைநீரில் அறுந்து விழுந்த மின்சார வயரை கவனிக்காமல், இருவரும் அதன் மேல் கால் வைத்தனர். இதில் மின்சாரம் பாய்ந்தது, தப்பிக்க முடியாமல் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவலறிந்து வந்த போலீசார், இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். இந்த விபத்துக்குக் காரணமாக, மின்வாரிய ஊழியர்களின் அலட்சியமே காரணம் எனக் கூறிய பெற்றோர், தங்களது குழந்தைகள் இழப்புக்கு நீதியைக் கோருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறுமிகள் உயிரிழந்துள்ள இந்த சம்பவம், ஜிராபஸ்தி கிராமத்தைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெறுகிறது.
