தூத்துக்குடி இந்திய அஞ்சல் துறை சார்பில், தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டி செப்டம்பர் 8 முதல் டிசம்பர் 8 வரை நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை தூத்துக்குடி கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் வதக் ரவிராஜ் ஹரிஷ்சந்திரா வெளியிட்டுள்ளார். “எனது முன்மாதிரிக்கு கடிதம்” (Letter to My Role Model) என்ற தலைப்பில் நடைபெறும் இந்த போட்டியில், அனைத்து வயதினரும் பங்கேற்கலாம்.
தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி என மூன்று மொழிகளில், எந்த ஒரு மொழியிலும் கடிதம் எழுதலாம். உள்நாட்டு கடிதப்பிரிவில் (Inland Letter) 500 வார்த்தைகளுக்கும், கடித உறை பிரிவில் (Envelope) 1000 வார்த்தைகளுக்கும் மீறாமல் கைப்பட எழுத வேண்டிய கட்டாயம் உள்ளது. எழுதிய கடிதங்களை, “முதன்மை அஞ்சல் துறை தலைவர், தமிழ்நாடு வட்டம், சென்னை – 600002” என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
போட்டியில் பங்கேற்கும் அனைவரும் தங்கள் முழுப்பெயர், முகவரி மற்றும் “1.1.2025 அன்று 18 வயது நிறைவு பெற்றவர்/பெறாதவர்” என்ற தகவலையும் உள்ளடக்கியிருக்க வேண்டும். இந்த போட்டியில் மாநில அளவில் வெற்றி பெறுவோர் ரூ.25,000 முதல் பரிசாக பெற, தேசிய அளவில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசு ரூ.50,000, 2ம் பரிசு ரூ. 25000, 3- ம் பரிசாக ரூ. 10000-மும் வழங்கப்படும்.
பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் போன்ற அனைவரும் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, தங்களது சிந்தனைகளை எழுத்து மூலம் பதிவு செய்து பரிசும், பெருமையும் பெறலாம் என அஞ்சல் துறை கேட்டுக்கொண்டுள்ளது.
