அமெரிக்கா H-1B வேலை விசாக்களுக்கு புதிய கட்டணமாக $100,000 (ஒரு முறை மட்டும்) அறிமுகப்படுத்திய நிலையில், இந்தியாவின் தொழில்நுட்ப வேலைவாய்ப்பை நாடும் இளைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களிடையே எதிர்மறை உணர்வுகள் உருவாகி வருகின்றன. இந்நிலையில், ஹைதராபாத் புறநகரில் உள்ள சில்கூர் பாலாஜி கோயில் மீதான நம்பிக்கை மீண்டும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்த கோயில், “விசா பாலாஜி கோயில்” என்று பரவலாக அழைக்கப்படுகிறது. கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு செல்ல விரும்பும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள், இங்கு வழிபாடு செய்து வருகின்றனர். இங்கு பிரார்த்தனை செய்வதன் மூலம் விசா கிடைக்கும் என்ற நம்பிக்கை வலுத்துள்ளது.
கோயிலில், 11 அல்லது 108 முறை கருவறையை சுற்றி வந்து ஒரு தனித்துவ வழிபாட்டு முறையும் உள்ளது. இது, விசா விண்ணப்பதாரர்களிடையே பரவலான வழக்கமாக உள்ளது. இது பற்றி கோயிலின் தலைமை பூசாரி சி.எஸ். ரங்கராஜன் தெரிவித்ததாவது: “இந்த கோயிலில் விசா பெறுவதற்காக பிரார்த்தனை செய்யும் பழக்கம் 1990களிலிருந்தே உள்ளது. சைதன்ய பாரதி போன்ற பிரபல பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் இங்கு வந்து, விசா பெறும் வரை பிரார்த்தனை செய்தனர். பின்னர் அவர்கள் இக்கோயிலுக்கு ‘விசா பாலாஜி’ என்று பெயர் சூட்டினர்,” எனத் தெரிவித்தார்.
இந்த கோயில், பண நன்கொடை பெட்டிகள் இல்லாததும், விஐபி பார்வையாளர்களுக்காக எந்தச் சிறப்பு சலுகையும் இல்லாததும், அதன் எளிமை மற்றும் சமத்துவ கோட்பாட்டை காட்டுகிறது. பக்தர்களிடமிருந்து பண நன்கொடைகள் ஏற்கப்படுவதில்லை, என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் அமெரிக்கா தற்போதைய குடியேற்றக் கட்டுப்பாடுகளை கடுமையாக்கி வரும் சூழலில், இந்தக் கோயில், தொழில்நுட்ப துறையினர் மற்றும் வெளிநாட்டு கனவுகளைக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு ஒரு நம்பிக்கையின் தூணாக அமைந்துள்ளது.
