உத்தரபிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் உள்ள பத்தரௌவா சாலையில், தலை மற்றும் கை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் ஒரு ஆணின் உடல் சாக்கடையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கண்டெடுக்கப்பட்ட அந்த உடலை நாய்கள் சிதைத்துக் கொண்டிருந்ததைக் கண்ட பொதுமக்கள் போலீசாருக்குத் தகவல் அளித்தனர்.

அந்த உடலின் இடது கையில் ‘ராகுல்’ என்று பச்சை குத்தப்பட்டிருந்ததை வைத்து போலீசார் விசாரணையைத் தொடங்கினர். விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த ரூபி என்ற பெண் தனது கணவர் ராகுலை ஒரு மாதத்திற்கு முன்பு காணவில்லை என்று புகார் அளித்திருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து ரூபியிடம் போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், அவர் தனது கள்ளக்காதலன் கௌரவ் என்பவருடன் சேர்ந்து கணவனைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

கொலைக்கான காரணம் குறித்துப் போலீசார் கூறுகையில், ராகுல் தனது மனைவி ரூபிக்கும் அவரது பக்கத்து வீட்டு இளைஞர் கௌரவிற்கும் இடையே இருந்த கள்ளத்தொடர்பைக் கடந்த நவம்பர் 18-ஆம் தேதி கையும் களவுமாகப் பிடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராகுல் தனது மனைவியை வீட்டை விட்டு விரட்டுவதாக மிரட்டியுள்ளார்.

இதனால் பயந்துபோன ரூபி, தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து ராகுலை இரும்புத் தண்டால் அடித்துக் கொலை செய்துள்ளார். பின்னர், ஒரு மின்சாரக் ரம்பத்தைப் பயன்படுத்தி ராகுலின் உடலைத் துண்டு துண்டாக வெட்டியுள்ளனர். அடையாளத்தை மறைப்பதற்காக ராகுலின் தலை மற்றும் கை, கால்களை ஒரு பையில் கட்டி கங்கை ஆற்றில் வீசியுள்ளனர். எஞ்சிய உடல் பகுதியை மட்டும் சாக்கடையில் வீசிவிட்டு, ஒன்றும் தெரியாதது போலக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

தற்போது ரூபி மற்றும் அவரது காதலன் கௌரவ் ஆகிய இருவரையும் கைது செய்துள்ள போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.