ஜப்பான் நாட்டின் இச்சிகாவா நகர உயிரியல் பூங்காவில் தாயால் கைவிடப்பட்ட பஞ்ச் என்ற 7 மாதக் குட்டிக்குரங்கு, நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தனது இனத்தைச் சேர்ந்த மற்ற குரங்குகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது.
பிறந்தவுடனேயே தாயால் கைவிடப்பட்ட இந்தப் பிஞ்சு குரங்கு, தனிமையில் வாடியபோது உயிரியல் பூங்கா ஊழியர்கள் அதற்கு ஒரு பொம்மையைத் துணையாக வழங்கினர். அந்தப் பொம்மையையே தனது தாயாகக் கருதி பஞ்ச் கட்டிப்பிடித்துக் கிடந்த காட்சிகள் உலகம் முழுவதும் உள்ள மக்களின் இதயங்களை உருகச் செய்தன.
மற்ற குரங்குகளுடன் சேர அது மேற்கொண்ட தொடக்க கால முயற்சிகள் தோல்வியில் முடிந்த நிலையில், தற்போது ஓன்சிங் என்ற பெரிய குரங்கு ஒன்று பஞ்ச் குட்டியை அரவணைத்து அன்பு காட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
குரங்குகளின் உலகில் மற்ற குரங்குகளைத் தூய்மைப்படுத்துவது என்பது நம்பிக்கை மற்றும் பிணைப்பை வெளிப்படுத்தும் முக்கிய அடையாளமாகக் கருதப்படுகிறது. இந்தப் பழக்கத்தின் மூலம் பெரிய குரங்குகள் தற்போது பஞ்ச் குட்டியைத் தங்கள் கூட்டத்தில் ஒருவராக ஏற்றுக்கொண்டுள்ளன.
After enduring days of rejection, Baby Punch finally experienced the comfort of love. Today, the adult monkey Onsing drew little Punch into a firm, deeply reassuring embrace. pic.twitter.com/SnCdsDZ5kl
— ✮ راينر براون (@dondawastaken) February 20, 2026
முன்னதாக பஞ்ச் குட்டி மற்றக் குரங்குகளுடன் பழக முயன்றபோது அவை விரட்டியடித்ததும், மற்ற தாய் குரங்குகள் தங்கள் குட்டிகளைத் தொந்தரவு செய்வதாகக் கருதி பஞ்ச்சை தாக்கியதும் பூங்கா நிர்வாகத்தால் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இத்தகைய சவால்களைத் தாண்டி தற்போது பஞ்ச் குட்டிக்குக் கிடைத்துள்ள இந்த அரவணைப்பு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்ச் குட்டி இனி தனது கூட்டத்துடன் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என இணையவாசிகள் பலரும் தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
