மும்பையில் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் 18 வயது இளைஞர் ஒருவருக்கு, ஜூன் 21-ம் தேதி நடக்கவிருக்கும் நீட் (NEET) மறுதேர்வை எழுத 4 நாட்கள் தற்காலிக ஜாமீன் வழங்கி மும்பை போக்சோ சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
நவிமும்பையின் தலோஜா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்த இளைஞருக்கு, பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காததால் இந்த ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
குற்றவியல் நீதி அமைப்பு என்பது சிறையில் இருப்பவர்களின் மறுவாழ்வுக்கான வாய்ப்பையும் வழங்க வேண்டும் என்ற வழக்கறிஞரின் வாதத்தை ஏற்ற நீதிமன்றம், 50,000 ரூபாய் பிணைத்தொகையுடன் பலத்த நிபந்தனைகளுடன் இவரை விடுவிக்க அனுமதித்துள்ளது.
ஜாமீனில் இருக்கும்போது பாதிக்கப்பட்ட பெண்ணையோ அல்லது அவரது குடும்பத்தினரையோ மிரட்டக் கூடாது, சாட்சியங்களைக் கலைக்கக் கூடாது என்றும், தேர்வு முடிந்த மறுநாளான ஜூன் 22-ம் தேதி மதியம் 2 மணிக்குள் மீண்டும் சிறை அதிகாரிகளிடம் சரணடைய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
