பிரபல சமூக ஊடக ரீல்ஸ் நட்சத்திரமும், சோலாப்பூர் மங்களவேதா பகுதியைச் சேர்ந்த ‘ஹோட்டல் கிராம பஞ்சாயத்து’ உரிமையாளருமான ரோகிணி பாராத்யே தற்கொலை வழக்கில் 25 நாட்களுக்குப் பிறகு தற்போது ஒரு முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
மேலயும் கடந்த மே 26 அன்று ரோகிணி தனது ஹோட்டல் சமையலறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. ஆரம்பத்தில் இது சாதாரண மரணம் என்று கருதப்பட்ட நிலையில், தற்போது ரோகிணியின் தந்தை பாலு சிவசரண் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் இந்த வழக்கில் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக, ரோகிணியைத் தற்கொலைக்குத் தூண்டியதாகக் கூறி அவரது கணவர் நிலேஷ் பாராத்யே மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இருவரும் காதலித்துத் திருமணம் செய்து கொண்ட நிலையில், அண்மைக்காலமாக ஹோட்டல் தொழிலை விரிவாக்கம் செய்வதில் ஏற்பட்ட நிதி நெருக்கடி மற்றும் குடும்பத் தகராறு காரணமாக இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதங்கள் ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்தச் சூழ்நிலையில், கணவரின் தொடர் தொல்லைகளே ரோகிணியின் இந்தத் தீவிர முடிவுக்குக் காரணம் என்று அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளதால், அவரது கணவர் நிலேஷ் தற்போது காவல்துறையின் பிடியில் சிக்கி விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளார்.
