உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில், பிறந்து மூச்சுப் பேச்சு இல்லாமல் இருந்த பச்சிளம் குழந்தைக்குத் தனது சுவாசத்தையை கொடுத்து உயிர் காத்த பெண் மருத்துவரின் செயல் காண்போரைக் கண் கலங்க வைத்துள்ளது. ஆக்ராவில் உள்ள அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் குஷ்பூ என்ற பெண்ணிற்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது.

 

ஆனால், நீண்ட நேரப் பிரசவ வலியால் பிறந்த அந்தக் குழந்தை மூச்சு விட முடியாமல் எவ்வித அசைவும் இன்றி உயிரிழந்த நிலையில் காணப்பட்டது. உடனடியாகக் குழந்தைக்கு ஆக்சிஜன் மற்றும் இதர மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டும் பலன் அளிக்காத நிலையில், அங்கிருந்த குழந்தைகள் நல மருத்துவர் சுலேகா சௌத்ரி சற்றும் தாமதிக்காமல் குழந்தைக்குத் தனது வாய் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கத் தொடங்கினார்.

சுமார் 7 நிமிடங்கள் தொடர்ந்து தனது மூச்சுக் காற்றைச் செலுத்திப் போராடிய மருத்துவர் சுலேகாவின் முயற்சியால், ஒரு கட்டத்தில் அந்தக் குழந்தை மெல்ல அசைந்து அழத் தொடங்கியது. தனது சுய சுத்தத்தைப் பற்றிச் சற்றும் கவலைப்படாமல், ஒரு தாயுள்ளத்தோடு போராடி அந்தக் குழந்தைக்கு மறுவாழ்வு அளித்த மருத்துவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இக்கட்டான சூழலில் தெய்வமாக வந்து குழந்தையைக் காப்பாற்றிய அந்தப் பெண் மருத்துவருக்குப் பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில், “ஒரு தாயாக அந்தப் பெண்ணின் வலியை உணர்ந்ததால்தான் என்னால் இதைப் பொறுப்புடன் செய்ய முடிந்தது” என்று மருத்துவர் சுலேகா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.