பிரபல நிக்கலோடியன் தொடரான ‘நெட்ஸ் டி கிளாசிஃபைட் ஸ்கூல் சர்வைவல் கைடு’ மூலம் புகழ்பெற்ற டைலர் சேஸ், அண்மையில் வீடின்றி சாலைகளில் வசிக்கும் அவல நிலை குறித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து, அத்தொடரில் அவருடன் பணியாற்றிய டேனியல் கர்டிஸ் லீ, அவரைச் சந்தித்து உணவளித்ததுடன் பண்டிகை காலத்தைக் கருத்தில் கொண்டு தங்குவதற்கு ஒரு ஹோட்டல் அறையையும் முன்பதிவு செய்து கொடுத்துள்ளார்.

 

ஆனால், அடுத்த சில மணி நேரங்களிலேயே அந்த ஹோட்டல் நிர்வாகத்திடம் இருந்து வந்த அழைப்பு டேனியலை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. டைலர் தங்கியிருந்த அறையில் குளிர்சாதனப் பெட்டியைத் தலைகீழாக மாற்றியதுடன், மைக்ரோவேவ் அடுப்பை குளியல் தொட்டிக்குள் போட்டு அறையையே சீர்குலைத்துள்ளார்.

டைலரின் தந்தை ஏற்கனவே இது குறித்து எச்சரித்திருந்தும், மனிதாபிமான அடிப்படையில் உதவிய டேனியல், தற்போது தனது நண்பரின் தீவிர மனநல பாதிப்பைக் கண்டு மிகுந்த மனவேதனை அடைந்துள்ளார். முறையான மருத்துவ சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையம் மட்டுமே இதற்குத் தீர்வாகும் என்று குறிப்பிட்டுள்ள டேனியல், அவரை 5150 எனும் அவசர மனநல சட்ட விதியின் கீழ் காவலில் எடுத்துச் சிகிச்சை அளிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.