சமூக வலைதளங்களில் லைக்ஸ் மற்றும் ஃபாலோயர்ஸ்களுக்காக என்ன வேண்டுமானாலும் நடக்கும் என்ற நிலை மாறி, தற்போது இன்ஸ்டாகிராம் மூலமாகவே கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டும் அதிர்ச்சி சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. ’25/Aug/2026′ என்ற பெயரில் தொடங்கப்பட்ட ஒரு இன்ஸ்டாகிராம் பக்கம், வெறும் 6 போஸ்ட்களை மட்டுமே பதிவிட்டு சுமார் 4.26 லட்சம் ஃபாலோயர்ஸ்களைப் பெற்று இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

​அந்தப் பக்கத்தில், “ஆகஸ்ட் 25-ம் தேதி ஒரு மிகப்பெரிய ரகசியத்தை வெளிப்படுத்தப் போகிறோம்” என்று தொடர்ந்து பில்டப் கொடுத்து மக்களிடையே பெரும் ஆர்வத்தைத் தூண்டியுள்ளனர். இந்த ரகசியம் என்னவாக இருக்கும் என்பதைத் தெரிந்து கொள்ள நெட்டிசன்கள் பலரும் அந்தப் பக்கத்தை தீவிரமாக பின் தொடரத் தொடங்கினர். தொடர்ந்து, அந்த இன்ஸ்டா பக்கம் தனது ஃபாலோயர்ஸ்களை டெலிகிராம் குழுவிற்கு மாற்றி, ஆகஸ்ட் 25 நள்ளிரவுக்குள் அந்த ரகசியத்தைப் பார்க்க வேண்டும் என்றால் ஒவ்வொருவரும் தலா ரூ.502 செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையை விதித்தது.

​அந்த மர்ம ரகசியத்தைப் பார்க்கும் பேரார்வத்தில், சுமார் 1.66 லட்சம் மக்கள் போட்டி போட்டுக்கொண்டு தலா 502 ரூபாயை ஆன்லைன் மூலம் செலுத்தியுள்ளனர். இதன் மூலம் அந்த பக்கத்தை நடத்திய நபர் ஒரே இரவில் சுமார் 8.3 கோடி ரூபாயை சுலபமாக வசூலித்துள்ளார். பணம் வசூலானதும், ஆகஸ்ட் 25 நள்ளிரவில் அந்த ரகசியம் வெளிவரும் என்று அனைவரும் ஆவலுடன் காத்திருந்தனர்.

​ஆனால், நள்ளிரவில் அந்தப் பக்கத்தில் வெளியிடப்பட்ட வீடியோவைக் கண்டு பணம் கட்டிய அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போயினர். அதில் எந்தவித பெரிய ரகசியமும் இல்லை; மாறாக, “வாழ்க்கையில் பணம், ரகசியம் எதுவுமே முக்கியமில்லை… நேரம்தான் மிகவும் முக்கியம்!” என்று சாதாரண ஏஐ (AI) குரலில் பேசும் ஒரு மோட்டிவேஷன் வீடியோ மட்டுமே பதிவிடப்பட்டிருந்தது. ரூ.502 கொடுத்து ஏமாந்து போன மக்கள், தங்களின் முட்டாள்தனத்தை நொந்து கொண்டு சமூக வலைதளங்களில் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.