இமயமலையின் மடியில் அமைந்த நேபாள நாடு, கடந்த 26-ந்தேதி காலையில் எதிர்பாராத விதமாக ஒரு பயங்கரப் பிரளயத்தைச் சந்தித்தது. சீன எல்லையை ஒட்டியுள்ள நேபாளத்தின் போடேகோஷி நதியில் ஏற்பட்ட பெருவெள்ளம், அந்தப் பிராந்தியத்தையே முற்றிலுமாக உருக்குலைத்துள்ளது.

போடேகோஷியின் கிளை நதியான லெண்டேயின் நீரோட்டத்தை இமயமலையில் நிகழ்ந்த பனிச்சரிவு தடுத்ததால் ஒரு பெரிய ஏரி உருவாகி, அது திடீரென உடைந்து இந்த காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வெறும் தண்ணீர் மட்டுமல்லாமல் பாறைகள், மண், சேறு என அனைத்தும் சேர்ந்து சுனாமி அலைகளை மிஞ்சும் வேகத்தில் பாய்ந்தோடியது. கண் இமைக்கும் நேரத்தில் நீர்மின் நிலையங்கள், பாலங்கள், சாலைகள், செல்போன் கோபுரங்கள் மற்றும் வீடுகள் என அனைத்தையும் அந்த வெள்ளம் வாரிச்சுருட்டிச் சென்றது.

சீன எல்லையை ஒட்டிய 8 மாவட்டங்கள் புரட்டிப் போடப்பட்ட நிலையில், ரசுவா, நுவாகோட், தடிங் ஆகிய 3 மாவட்டங்கள் முற்றிலும் சிதைந்து போயுள்ளன. பல அடி உயரத்துக்குக் கொட்டிக்கிடக்கும் மணல் மற்றும் சேற்றைக் காணும்போதே நெஞ்சம் பதைபதைக்கிறது. ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், பலியானோர் எண்ணிக்கை 600-ஐ நெருங்குகிறது. மேலும், 2,500-க்கும் மேற்பட்டோரைத் தேடும் பணி தீவிரமாக நடக்கிறது. இதற்கிடையில், ஆற்றில் மீண்டும் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் மக்களும் மீட்புப் பணியாளர்களும் உஷாராக இருக்குமாறு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

தொடக்கத்தில், பாலன் ஷா தலைமையிலான நேபாள அரசு தனது சொந்தப் பாதுகாப்புப் படைகளைக் கொண்டே மீட்புப் பணிகளைக் கையாள முடியும் என்று கூறி, சர்வதேச நாடுகளின் உதவிகளைத் கனிவாக நிராகரித்தது. 2015 நிலநடுக்கத்தின்போது ஏற்பட்ட ஒருங்கிணைப்புக் சிக்கல்களைக் கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டது.

ஆனால், இந்த வெள்ளத்தில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த குடிமக்களும் காணாமல் போனதால், சம்பந்தப்பட்ட நாடுகளிடமிருந்து கடுமையான அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதன் விளைவாக, தனது முடிவை மாற்றிக் கொண்ட நேபாள அரசு, இந்தியா, சீனா, ஆஸ்திரேலியா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த குறிப்பிட்ட நிபுணர்கள் மற்றும் மீட்புக் குழுக்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

இந்தத் துயரச் சம்பவத்தில் குறைந்தது 320 இந்தியர்களை இன்னும் காணவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சீனப் பகுதியில் மாட்டிக்கொண்டிருந்த சுமார் 400 இந்தியர்களில் 153 பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பாக நேபாளம் வந்துள்ளனர்.

இந்திய வெளியுறவு அமைச்சகம் நேபாள அரசுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளது. இதனிடையே, பயிற்சி பெற்ற தேசிய பேரிடர் மீட்புப் படை குழுக்களையும், அவசியமான நிவாரணப் பொருட்களையும் நேபாளத்திற்கு அனுப்ப இந்தியா முழு வீச்சில் தயாராகியுள்ளது. இந்தியாவின் இந்தத் தீவிர உதவிகளால் மீட்புப் பணிகள் விரைவில் வேகம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.