பேஷன் உலகத்தில் எப்போதுமே விசித்திரமான மற்றும் கற்பனைக்கு எட்டாத டிசைன்கள் வருவது வழக்கம். அந்த வகையில், பிரான்சின் புகழ்பெற்ற சொகுசு பிராண்டான ‘சனல்’ (Chanel) நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள ஒரு விசித்திரமான செருப்பு தற்போது இணையத்தில் பெரும் தீயாய் பரவி விவாதத்தைக் கிளப்பியுள்ளது. பிராண்டின் புதிய கிரியேட்டிவ் டைரக்டரான மேத்யூ பிளேஜி  வடிவமைத்த இந்தச் செருப்பு, பிரான்சின் பியாரிட்ஸ் நகரில் நடைபெற்ற ‘சனல் க்ரூஸ் 2027’ பேஷன் ஷோவின் ரேம்ப் வாக்கில் முதன்முதலில் அறிமுகமானது. இதைப் பார்த்த அனைவரின் மனதிலும் ஒரே ஒரு கேள்விதான் எழுந்தது; “மாடல்ஸ் உண்மையில் எதையாவது அணிந்துள்ளனரா அல்லது கால்கள் வெறுங்காலாக இருக்கிறதா?” இந்த சந்தேகத்தினாலேயே மக்கள் இதனை ‘நங்கே பீர் செருப்பு’ (Barefoot Slipper) என்று அழைக்கத் தொடங்கினர்.

இதை ஒரு சாதாரண செருப்பு என்று நினைத்து ஏமாந்துவிடாதீர்கள். இதில் வழக்கமான செருப்புகளைப் போல தரையில் தொடும் ‘சோல்’ பகுதியோ அல்லது விரல்களைப் பிடித்துக்கொள்ளும் ஸ்ட்ராப்புகளோ கிடையவே கிடையாது. பின் அப்படியென்றால் இதில் என்னதான் இருக்கிறது?

 

 

View this post on Instagram

 

A post shared by W Magazine (@wmag)

வெறும் குதிக்கால் பகுதியில் மட்டும் ஒட்டிக்கொண்டிருக்கும் ஒரு சிறிய தோல் துண்டு மற்றும் அதிலிருந்து நீண்டு கணுக்காலில் சுற்றிக்கொள்ளும் ஒரு மெல்லிய கயிறு மட்டுமே இதன் மொத்த வடிவமைப்பு! தூரத்தில் இருந்து பார்த்தால் காலில் செருப்பே அணியாதது போலவும், அருகில் வந்து பார்த்தால் ஏதோ ஒரு ஆபரணம் தொங்குவது போலவும் தோன்றும். இந்தச் செருப்புகள் கோல்டன், சில்வர் மற்றும் பிளாக் போன்ற கிளாசிக் நிறங்களில் காட்சிப்படுத்தப்பட்டன.

இந்த வித்தியாசமான டிசைனுக்கான பின்னணியைப் பற்றி பிராண்ட் தரப்பில் கூறுகையில், சனல் நிறுவனத்தின் ஸ்தாபகரான கோகோ சனல் (Coco Chanel) கடற்கரை மணலில் வெறுங்காலோடு உலா வந்த பழைய புகைப்படம் ஒன்றுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், அந்த சுதந்திரமான உணர்வை மீண்டும் கொண்டுவரும் நோக்கத்துடனும் இது வடிவமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

இப்போது இந்தச் செருப்பின் மிக முக்கியமான மற்றும் அதிர்ச்சியூட்டும் பகுதிக்கு வருவோம் – அதுதான் விலை! ஊடகங்களின் தகவல்படி, இந்த ஒற்றைக் குதிக்கால் பட்டிச் செருப்பின் விலை சுமார் 25 ஆயிரம் முதல் 90 ஆயிரம் ரூபாய் வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. யோசித்துப் பாருங்கள், இவ்வளவு தொகையைக் கொடுத்தால் நாம் பல ஜோடி தரமான பிராண்டட் காலணிகளையே வாங்கிவிடலாம்; ஆனால் இங்கு நமக்குக் கிடைப்பதோ வெறும் குதிக்காலை மூடும் ஒரு சிறிய துண்டு மட்டுமே! தற்போது இதுவொரு அதிகாரப்பூர்வ விற்பனைப் பொருளாக இல்லாவிட்டாலும், ஷோவிற்காக உருவாக்கப்பட்ட ஒரு கான்செப்ட் பீஸ்  என்றே கூறப்பட்டுள்ளது.

இந்தச் செருப்பின் புகைப்படங்களும் வீடியோக்களும் வெளியானதுமே, இணைய உலகம் இரண்டாக வெடித்துச் சிதறியது போல் ரெண்டு பிரிவாகப் பிரிந்து விவாதித்து வருகிறது. ஒரு தரப்பினர், “இதுதான் உண்மையான பேஷன், துணிச்சலான மற்றும் கலைநயமிக்க யோசனை!” என்று புகழ்ந்து தள்ளுகின்றனர். மற்றொரு தரப்பினரோ, “இது செருப்பா இல்லை சுளுக்குப் பிடிச்சா கட்டு போடும் வார்சாவா?” என்று கலாய்த்துத் தள்ளி வருகின்றனர். சிலர், “இத்தனை பணம் கொடுத்தால் வெறும் குதிக்கால் மட்டும்தான் கிடைக்குமா,என்று மீம்ஸ்களைத் தெறிக்கவிட்டு இணையத்தில் இதைத் டிரெண்டிங்கின் உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர்.