ஹரியானா மாநிலம் குருகிராமத்தில் அமைந்துள்ள சொகுசு குடியிருப்புப் பகுதியில், ஏர் இந்தியா நிறுவன ஊழியரின் மனைவியான கீர்த்திமை மிஸ்ரா (44) என்பவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன. கணவனின் கைப்பேசியில் சக பெண் ஊழியருடன் இருந்த புகைப்படத்தைப் பார்த்ததால் ஏற்பட்ட குடும்பத் தகராறே இந்த விபரீத முடிவுக்குக் காரணம் என்பது காவல்துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரைச் சேர்ந்த கீர்த்திமை மிஸ்ரா, குருகிராமத்தில் உள்ள ‘ஸ்மார்ட் வேர்ல்ட்’ நிறுவனத்தில் கற்றல் மற்றும் திறமை மேம்பாட்டுத் தலைவராகப் பணியாற்றி வந்தார். இவரது கணவர் யுவராஜ் சர்மா, மும்பையைச் சேர்ந்தவர் மற்றும் ஏர் இந்தியா நிறுவனத்தில் கேபின் கிரூ பயிற்சி அதிகாரியாகப் பணிபுரிந்து வருகிறார். காதலித்துத் திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு 9 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

கடந்த புதன்கிழமை இரவு சுமார் 9:30 மணியளவில், கீர்த்திமை தனது கணவர் மற்றும் குழந்தையுடன் படுக்கையில் அமர்ந்திருந்தபோது எதிர்பாராதவிதமாக யுவராஜின் கைப்பேசியை எடுத்துப் பார்த்துள்ளார். அப்போது, ஏர் இந்தியா அகாடமி ஊழியர்களின் புகைப்படங்களுக்கு நடுவே, தனது கணவர் யுவராஜ் மற்றொரு பெண் சக ஊழியருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதனால் ஆத்திரமும் சந்தேகமும் அடைந்த அவர் கணவரிடம் இதுகுறித்து விளக்கம் கேட்டுள்ளார். இது பெரிய அளவில் வெடித்து இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதமும் சண்டையும் ஏற்பட்டுள்ளது.

சண்டைக்குப் பிறகு கடும் கோபமடைந்த கீர்த்திமை, திடீரென வீட்டின் மற்றொரு அறைக்குச் சென்று உள்ளே தாழிட்டுக் கொண்டார். இரவோடு இரவாகக் கோபம் தணிந்துவிடும் என்று நினைத்த கணவர் யுவராஜ் அமைதியாக இருந்துவிட்டார். ஆனால், அடுத்த நாள் காலை நீண்ட நேரமாகியும் அறையின் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர் கதவைத் தட்டியும் உள்ளிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. உடனே பால்கனி வழியாக உள்ளே எட்டிப்பார்த்தபோது, கீர்த்திமை மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையைக் கண்டு பதறிப்போனார்.

பதற்றமடைந்த யுவராஜ், கதவின் கண்ணாடியை அடித்து உடைத்து உள்ளே நுழைந்தபோது அவரது கைகளிலும் கால்களிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டன. உடனடியாகக் காவல்துறையினருக்கும் நண்பர்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றினர்.

இறந்துபோன கீர்த்திமையின் தம்பி மேற்படிப்பிற்காக வெளிநாடு செல்லவிருக்கும் நிலையில், சம்பவத்திற்கு நான்கே நாட்களுக்கு முன்புதான் தன் அக்காவிடம் வந்து ராக்கி கயிறு கட்டிச் சென்றுள்ளார். தற்போது அக்காவின் அகால மரணச் செய்தி கேட்டு அதிர்ந்துபோன அவர், வெள்ளிக்கிழமை காலையில் விமானம் மூலம் குருகிராம் திரும்பியதைத் தொடர்ந்து பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது. இந்தச் சோகச் சம்பவம் குறித்துக் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.