ஜப்பானின் ஐச்சி-நகோயா நகரில் நடைபெறவுள்ள 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கிரிக்கெட் போட்டிகள் இடம்பெற்றுள்ளன. கடந்த முறை சீனாவில் நடைபெற்ற போட்டிகளில் இந்திய அணி தங்கம் வென்றது போலவே, இம்முறையும் தங்கப்பதக்கத்தை வெல்லும் முனைப்பில் பிசிசிஐ மிக வலுவான அணிகளைத் தேர்வு செய்துள்ளது. ஆனால், தற்போது வெளியாகியுள்ள ஒரு செய்தி கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. போட்டிகள் நடைபெறும் மைதானத்தில் வீரர்களுக்குப் போதுமான வசதிகள் இல்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
ஏஎன்ஐ (ANI) செய்தி நிறுவனத்தின் தகவல்படி, போட்டிகள் நடைபெறும் மைதானத்தில் வீரர்களுக்கென நிரந்தர அறை வசதிகள் இல்லையாம். அதற்குப் பதிலாக தற்காலிகத் கூடாரங்கள் அமைக்கப்பட்டு, அவைதான் டிரஸ்ஸிங் ரூம்களாகப் பயன்படுத்தப்படவுள்ளன.
இதைவிட ஆச்சரியம் என்னவென்றால், வீரர்கள் பயன்படுத்தும் கழிவறைகள் இந்தத் கூடாரங்களிலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், வீரர்களைத் தங்க வைக்கத் திட்டமிடப்பட்டுள்ள ஹோட்டல்களும் மிகச் சிறியதாக உள்ளதாகக் கூறப்படுவதால், பிசிசிஐ மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கடுமையான அதிருப்தியில் உள்ளன.
இந்தக் குறைபாடுகள் குறித்து ஜப்பான் ஒலிம்பிக் கமிட்டியிடம் முறையிடப்பட்டுள்ளது. நிலைமையை நேரில் ஆய்வு செய்ய பிசிசிஐ சார்பில் விரைவில் ஒரு சிறப்புப் பார்வையாளர் ஜப்பானுக்கு அனுப்பப்பட உள்ளார். அந்த ஆய்வறிக்கையின் அடிப்படையில்தான், முன்னணி வீரர்களைக் கொண்ட இந்த வலுவான அணிகளை ஜப்பானுக்கு அனுப்புவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும். ஒருவேளை வசதிகள் மேம்படுத்தப்படாவிட்டால், பிசிசிஐ மாற்று யோசனைகளை யோசிக்கலாம் எனத் தெரிகிறது. மேலும் இந்தியாவைப் போன்றே ஆப்கானிஸ்தான், இலங்கை, பாகிஸ்தான் ஆகிய ஆணிகளும் அதிருப்தி தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
