சென்னை தாம்பரத்தை அடுத்துள்ள திருநீர்மலை பகுதியைச் சேர்ந்தவர் அன்பழகன் என்ற ‘மைனாகுட்டி’ (40). விடுதலை சிறுத்தைகள் கட்சியின் (வி.சி.க) மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளராகப் பொறுப்பு வகித்து வந்த இவர், தற்போது குடும்பத்துடன் கே.கே.நகர் பகுதியில் வசித்து வந்தார். இந்த நிலையில் அவர் தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது, ஹெல்மெட் அணிந்து மூன்று பைக்குகளில் வந்த 6 பேர் கொண்ட மர்மக் கும்பல் அவரை மட்டும் குறிவைத்துச் சுற்றிவளைத்துச் சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பியோடியது.
உடனடியாக அவரது நண்பர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திலுள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஆட்டோ மற்றும் பைக்குகளில் வந்த கும்பல் இந்தத் துணிகரக் கொலையில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.
போலீசாரின் தீவிர விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாயின. கொல்லப்பட்ட அன்பழகன் மீது 3 கொலை வழக்குகள் உள்பட மொத்தம் 14 குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக, கடந்த 2009-ஆம் ஆண்டு சேர்ந்த குமார் என்பவரைக் கொலை செய்த வழக்கிலும், 2021-ஆம் ஆண்டு தி.மு.க. பிரமுகர் கணேசன் என்பவரைக் கொலை செய்த வழக்கிலும் இவர் முக்கியக் குற்றவாளியாக உள்ளார்.
கணேசன் கொலை வழக்கில் அன்பழகனும் அவரது நண்பரான நா வீனஸ் என்பவரும் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் ஜாமீனில் வெளியில் வந்த அன்பழகன், கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படும் ‘சரள் மண்’ வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தார். இந்தத் தொழில் மூலம் அவருக்கு வருமானம் அதிகரிக்கவே, நண்பனாக இருந்த வீனஸுக்கும் அவருக்கும் இடையே தொழில் போட்டி மற்றும் முன்விரோதம் வெடித்தது.
இதுமட்டுமின்றி, தி.மு.க. பிரமுகர் கணேசன் கொலை வழக்கிலும் இரு தரப்புக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நீடித்துள்ளன. நாளுக்கு நாள் மோதல் முற்றியதால்தான் அன்பழகன் தனது இருப்பிடத்தைக் கூட மாற்றியுள்ளார். இருப்பினும், முன்விரோதக் காரணமாக நண்பன் வீனஸ்தான் கூலிப்படையை ஏவி அன்பழகனைத் தீர்த்துக்கட்டியுள்ளான் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தக் கொலையில் தொடர்புடைய வீனஸ் உள்ளிட்ட சிலரைச் சங்கர்நகர் போலீசார் அதிரடியாகக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
