சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியில் ஒட்டுமொத்த மனிதநேயத்தையும் உலுக்கியெடுத்த ஒரு பயங்கரமான படுகொலைச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாம்பரத்தைச் சேர்ந்த ஹைதுல் நிஷா என்ற பெண்ணைக் கொடூரமாகக் கொன்று, அவரது உடல் பாகங்களைச் சூட்கேஸில் அடைத்து ரயிலில் ஏற்றியதோடு, மீதமுள்ள பாகங்களைப் பிரியாணி டபராவில் வைத்து வேகவைத்த வழக்கில், கடந்த 15 நாட்களுக்கும் மேலாகத் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியை மணிப்பூரில் காவல்துறை அதிரடியாகக் கைது செய்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரத்தில், சென்னையின் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புது தில்லி நோக்கிச் சென்ற விரைவு ரயிலில் சூட்கேஸ் ஒன்றிற்குள் மனிதச் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அந்தச் சூட்கேஸில் இருந்த மனித உடல் துண்டுகள் சென்னைத் துணிக்கடைப் பையில் வைக்கப்பட்டிருந்ததைக் கண்டறிந்த ஆக்ரா காவல் துறையினர், உடனடியாக சென்னை காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து விசாரணையைத் தீவிரப்படுத்திய சென்னை காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து அந்தச் சூட்கேஸை ரயில் நிலையத்தில் வந்து வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களின் விவரங்கள் உடனடியாகத் தெரியவராததால், அந்த சிசிடிவி வீடியோ காட்சிகளை காவல்துறை வெளியிட்டது. பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையிலும், செல்போன் சிக்னல்களைத் துப்பறிந்தும் குற்றவாளிகள் கூடுவாஞ்சேரியில் தங்கியிருந்த வீட்டைப் போலீசார் கண்டறிந்தனர்.
கூடுவாஞ்சேரியில் குற்றவாளிகள் வசித்து வந்த வீட்டுக்குள் நுழைந்த காவல்துறையினருக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது. அங்கே ஒரு பெரிய பிரியாணி டபரா மூடி போடப்பட்டு, மைதா மாவால் காற்றுப் புகாதவாறு பலமாகச் சீல் வைக்கப்பட்டிருந்தது. அதனைத் திறந்து பார்த்தபோது, மனித உடல் பாகங்கள் அந்தப் பிரியாணி டபராவுக்குள் வேகவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. தடயங்களை அழிப்பதற்காகக் குற்றவாளிகள் இந்த கோரச் செயலில் ஈடுபட்டுள்ளனர். உடனடியாக அந்தப் பிரியாணி டபரா மேல் ஆய்விற்காகச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
விசாரணைல் கொலை செய்யப்பட்டது தாம்பரம் பகுதியைச் சேர்ந்த ஹைதுல் நிஷா என்பது உறுதியானது. கொலையாளிகளுடன் தங்கியிருந்த அவர் திடீரெனக் காணாமல் போனது குறித்து அவரது மகன் காவல் நிலையத்தில் ஏற்கனவே புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கொடூரக் கொலையில் ஈடுபட்டுத் தப்பியோடியவர்கள் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மாணிக் உத்தின் லஸ்கர் மற்றும் அவரது மனைவி பகமதி மாஜிக் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. அவர்கள் செல்போன் சிக்னல் மூலம் முதலில் ஒடிசாவுக்குத் தப்பியதை அறிந்த போலீசார், அங்கே விரைந்தனர். ஆனால், அதற்குள் அங்கிருந்து மணிப்பூருக்குத் தப்பிய மாணிக் உத்தின் லஸ்கரை தீவிரத் தேடுதல் வேட்டைக்குப் பிறகு மணிப்பூரில் தனிப்படை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். அவருடன் இருந்த அவரது மனைவி மற்றும் உடன் தொடர்புடையவர்கள் குறித்த தீவிர விசாரணையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
