அமெரிக்காவின் மத்திய அட்லாண்டிக் கடல் பகுதியில் மிகவும் மதிக்கப்படும் ஒரு கடல் உணவு இனமான ‘நீல நிற நண்டுகள்’, தற்போது உலகின் பிற கடற்பகுதிகளில் ஒரு ஆபத்தான ஆக்கிரமிப்பு இனமாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக, இத்தாலியின் மத்திய தரைக்கடல் பகுதியில் கடந்த நூற்றாண்டில் கால்பதித்த இந்த நண்டுகள், கடந்த பத்து ஆண்டுகளில் பல்கிப்பெருகி உள்ளூர் பல்லுயிர் பெருக்கத்திற்கும், அங்குள்ள பாரம்பரிய மீன்பிடித் தொழிலுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக விஸ்வரூபம் எடுத்துள்ளன.
குறிப்பாக, அங்கிருக்கும் உள்ளூர் இனமான இத்தாலிய மீன்களை இந்த நீல நண்டுகள் இரையாக்கி அதிகளவில் சாப்பிட்டு வருவதால், அந்தச் சூழலியலைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயம் ஆராய்ச்சியாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த விபரீதத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், போலோக்னா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் எமிலியா-ரொமானியா பிராந்திய அரசாங்கத்துடன் கைகோர்த்து ‘ஆக்டோ-ப்ளூ’ என்ற அதிரடித் திட்டத்தைத் தொடங்கியுள்ளனர். இதன் ஒரு பகுதியாக, கடலில் பெருக்கெடுத்துள்ள நீல நண்டுகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த, சுமார் 1,30,000 ஆக்டோபஸ் குஞ்சுகள் இத்தாலிய கடற்பரப்பில் விடப்பட்டுள்ளன.
தற்போது கடலில் விடப்பட்டுள்ள இந்தச் சிறிய ஆக்டோபஸ் குஞ்சுகள் வெறும் சில மில்லிமீட்டர் நீளம் மட்டுமே கொண்டவை. ஆனால், அவை வளர்ந்து பெரியதாகும்போது நீல நண்டுகளுக்கு சிம்ம சொப்பனமாக மாறும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இயற்கையாகவே, சாதகமான சூழ்நிலையில் ஒரு கிலோகிராம் எடையுள்ள சாதாரண ஆக்டோபஸால் ஒரு நாளைக்கு நான்கு நடுத்தர அளவிலான நீல நண்டுகள் வரை வேட்டையாடி உண்ண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அற்புதமான யோசனையின் பின்னணியில் மிகப்பெரிய நிச்சயமற்ற தன்மையும் ஒளிந்துள்ளது. பொதுவாக, ஆக்டோபஸ் குஞ்சுகளின் இயற்கை இறப்பு விகிதம் சுமார் 99.9 சதவீதமாகும். அதாவது, வயது முதிர்வடையும் காலம் வரை அவைகளால் நீண்ட காலம் உயிர்வாழ முடியாது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கடல்சார் சூழலியலாளர் கியான்லூகா சாரா, “இதன் பின்னணியில் உள்ள யோசனை மிகவும் அற்புதம்; ஆனால், இதன் தாக்கம் முற்றிலும் புறக்கணிக்கத்தக்கதாகக் கூட மாற வாய்ப்புள்ளது. கடலில் விடப்பட்டவற்றில் ஒரு சிறிய பகுதி மட்டுமே இறுதியில் ஆக்கிரமிப்பு நண்டுகளை வேட்டையாடும் அளவுக்கு வளரும்” என்று எச்சரிக்கிறார்.
மறுபுறம், இந்தத் திட்டத்தில் ஈடுபட்டுள்ள மற்றொரு நிபுணரான அன்டோனியோ கசாலினி கூறுகையில், “நாங்கள் புதிதாக எந்த வெளிநாட்டு இனத்தையும் கடலில் திணிக்கவில்லை. மாறாக, அட்ரியாட்டிக் கடலில் ஏற்கனவே இயற்கையாக உள்ள ஒரு பூர்வீக இனத்தின் எண்ணிக்கையை மட்டுமே பலப்படுத்துகிறோம்” என்று விளக்கமளித்துள்ளார். ஆக்டோபஸ்கள் மிகக் கடினமான சூழலிலும் வாழக்கூடியவை, வேகமாக இனப்பெருக்கம் செய்பவை மற்றும் ஒரு பெண் ஆக்டோபால்கூட நூறாயிரக்கணக்கான முட்டைகளை இடக்கூடியவை என்பதால் ஆராய்ச்சியாளர்கள் இந்தத் துணிச்சலான முடிவை எடுத்துள்ளனர்.
