உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில், ரக்ஷா பந்தன் திருநாளின்போது தம்பதியிடையே ஏற்பட்ட சாதாரண வாக்குவாதம் எல்லை மீறிச் சென்றதால், ஆத்திரமடைந்த கணவன் தன் அருமையான அபாச்சி பைக்கிற்கே தீயிட்டு எரித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

பிஜ்னோர் மாவட்டம், ஜட்புரா பகுதியைச் சேர்ந்த பப்லு சைனி என்பவர், ரக்ஷா பந்தனை முன்னிட்டு தனது மனைவியும் குழந்தைகளுடன் தனது மாமனாருக்குச் சொந்தமான வீட்டுக்கு  புறப்பட்டுச் சென்றார். வழியில், தனது குடும்பத்தினருக்காக இரண்டு டப்பாக்களில் மிட்டாய் மற்றும் ஒரு பெரிய குளிர்பானக் குடுவை வாங்கித் தரும்படி அவரது மனைவி கேட்டுள்ளார். ஆனால் பப்லுவோ, இரண்டு டப்பாக்களுக்குப் பதிலாக ஒரே ஒரு டப்பா மிட்டாய் மட்டுமே வாங்கியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மனைவி தன் அதிருப்தியை வெளிப்படுத்த, இருவருக்கும் இடையே வாக்குவாதம் வெடித்தது. கிராமத்தில் உள்ள பஞ்சாயத்து அலுவலகம் அருகே சென்றபோது சண்டை மேலும் தீவிரமானது. கோபத்தின் உச்சிக்குச் சென்ற பப்லு, சட்டென்று தனது அபாச்சி பைக்கை சாலையோரமாக நிறுத்திவிட்டு, அதில் திடீரென தீயிட்டு கொளுத்தினார்.

மனைவியும் பிஞ்சுக் குழந்தைகளும் கண் முன்னகவே நின்றுகொண்டிருக்க, அந்தப் பைக் சில நிமிடங்களிலேயே மளமளவென்று தீப்பிடித்து எரியத் தொடங்கியது.  கண் இமைக்கும் நேரத்தில் அந்தப் பைக் முழுமையாக எரிந்து சாம்பலானது. எந்தவிதக் கவலையும் இன்றி தீயில் எரிந்த பைக்கைக் விட்டுவிட்டு பப்லு விறைப்பாக நடக்கத் தொடங்கினார். அவருக்குப் பின்னால் செய்வதறியாது திகைத்துப்போன மனைவியும் குழந்தைகளும் பரிதாபமாக நடந்து சென்றனர். இந்த விசித்திரமான மற்றும் அதிர்ச்சிகரமான காட்சியைக் கண்ட அந்த வழியாகச் சென்றவர்கள் தங்கள் செல்போன்களில் வீடியோவாகப் பதிவு செய்தனர். இந்த வீடியோ தற்போது இன்டர்நெட்டில் வைரலாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சம்பவம் குறித்துப் போலீசாரிடம் இருந்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என்றாலும், மனைவியுடன் ஏற்பட்ட சிறிய சண்டையின் காரணமாகக் கணவனே தன் சொந்த வாகனத்தை எரித்த இந்தச் செயல் அப்பகுதியில் பெரும் பேசும் பொருளாகியுள்ளது.