ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத் பகுதியில் மனிதநேயத்தை உலுக்கும் மற்றும் தாய்மையின் கருணையைச் கேள்விக்குள்ளாக்கும் ஒரு பயங்கரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது  மூன்று குழந்தைகளின் தாயான பெண் ஒருவர், கடும் மன உளைச்சல் மற்றும் ஆத்திரத்தின் உச்சத்தில் தனது சொந்த 2 வயது பச்சிளம் குழந்தை மீது கூர்மையான பேப்பர் கட்டரால் கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளார். இந்தக் கோரச் சம்பவத்தைத் தொடர்ந்து, காவல்துறையினர் அந்தத் தாயைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

அதாவது  கிருஷ்ண குமார் என்பவருக்கு திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆன நிலையில், மூன்று குழந்தைகள் உள்ளனர். கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி மதிய வேளையில், கணவரும் பாட்டியும் வேலைக்குச் சென்றிருந்தபோது, அந்தப் பெண் தனது மூன்று குழந்தைகளுடன் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது குழந்தைகள் அழுதுகொண்டிருந்ததால் ஏற்பட்ட கடும் மன அழுத்தம் காரணமாக, அவர் தனது இரண்டு வயது மகனைத் தாக்கித் துன்புறுத்தியுள்ளார்.

மாலையில் வேலை முடிந்து வீடு திரும்பிய கணவர் கிருஷ்ண குமார், தனது மனைவி பச்சிளம் குழந்தையைத் தாக்கித் துன்புறுத்துவதைக் கண்டு அதிர்ந்துபோய் உடனே தடுத்துள்ளார். ஆனால், ஏற்கனவே ஆத்திரத்தின் உச்சத்தில் இருந்த அந்தப் பெண், தன் கணவர் கண்ணெதிரிலேயே வீட்டில் இருந்த கூர்மையான பேப்பர் கட்டரை எடுத்து தனது 2 வயது மகனின் கழுத்துப் பகுதியில் கொடூரமாகக் கீறித் தாக்கியுள்ளார். இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த குழந்தைக்கு உடல் முழுவதும் இரத்த வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

ரத்த வெள்ளத்தில் துடித்த தனது குழந்தையைக் கண்டு பதறிப்போன தந்தை கிருஷ்ண குமார், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்று அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்துள்ளார். அங்கு குழந்தைக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்ததும் விரைந்து வந்த காவல் துறையினர், கொடூரத் தாக்குதலில் ஈடுபட்ட தாயைக் கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர்.

இதுகுறித்து காவல் துறை மூத்த அதிகாரி கூறுகையில், “ஆரோக்கியமற்ற மனநிலை மற்றும் தொடர்ந்து மூன்று குழந்தைகளையும் கவனித்துக்கொள்ளும் பொறுப்பால் ஏற்பட்ட அதீத மன உளைச்சல் மற்றும் விரக்தியே இந்த விபரீதத்திற்குக் காரணம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் கைது செய்யப்பட்ட பெண்ணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிபதி உத்தரவின்படி சிறையில் அடைத்துள்ளோம்; தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது” என்றார்.