பிரதமரின் விவசாயிகள் கௌரவ நிதித் திட்டமான பி.எம். கிசான் திட்டத்தில் ரூ.60 கோடிக்கும் அதிகமான அளவில் முறைகேடு நடைபெற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தில், குந்தா வட்டாட்சியர் அலுவலகத்தின் உள்நுழைவு வசதியைப் பயன்படுத்தி போலியான பயனாளிகள் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக வேளாண்மைத் துறை நடத்திய விசாரணைக்குப் பின்னர், அடையாளம் தெரியாத நபர்கள் மீது சைபர் போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் நிர்வாக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிகாரிகளின் ஆய்வில், குந்தா வட்டாட்சியர் அலுவலகத்தின் “நேரடி பதிவு” வசதி மூலம் 3.18 லட்சத்துக்கும் மேற்பட்ட பதிவுகள் செய்யப்பட்டிருப்பது தெரியவந்ததாகக் கூறப்படுகிறது. அவற்றில் பலர் திட்டத்தின் பயன்களைப் பெறத் தகுதியற்றவர்கள் என விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, சிறார்களும், அந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அல்லாதவர்களும், வேறு மாநிலங்களில் வசிப்பவர்களும் பயனாளிகளாகப் பதிவு செய்யப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற சந்தேகத்துக்குரிய பதிவுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டபோது, முறைகேட்டின் அளவு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்தப் போலி பதிவுகளுடன் தொடர்புடைய பணப் பரிமாற்றம் ரூ.60 கோடியைத் தாண்டியிருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

பி.எம். கிசான் திட்டத்தின் கீழ் பயனாளிகள் தங்களது செல்லிடப்பேசி மூலமாகவோ அல்லது பொது சேவை மையங்கள் மூலமாகவோ பதிவு செய்ய வேண்டும். பின்னர் அந்த விண்ணப்பங்கள் வட்டாட்சியர் அளவில் பரிசீலிக்கப்பட்டு, மாவட்டம், மாநிலம் மற்றும் மத்திய அளவிலான சரிபார்ப்புக்குப் பிறகு தகுதியான விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. ஆனால், குந்தா அலுவலகத்தின் நேரடி பதிவு வசதி முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக சுமார் 1,700 இணைய முகவரிகள் மற்றும் போலியான பயனாளிகள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட நேரடி பதிவு வசதி இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

இந்த மோசடி தொடர்பாக பிரதாப்கர் மாவட்ட வேளாண்மைத் துறை துணை இயக்குநர் அளித்த புகாரின் அடிப்படையில் சைபர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். போலி பதிவுகளை உருவாக்கியது யார், பயனாளிகளாகப் பதிவு செய்யப்பட்டவர்கள் யார், அவர்களுக்கு எவ்வளவு தொகை சென்றடைந்தது என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், இந்த முறைகேட்டில் அதிகாரிகள் அல்லது இடைத்தரகர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பதையும் விசாரணை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அரசு நிதி தகுதியான பயனாளிகளுக்கு சென்றடைவதை உறுதி செய்யும் கண்காணிப்பு நடைமுறைகள் குறித்து இந்தச் சம்பவம் கேள்விகளை எழுப்பியுள்ளது. விசாரணை முடிவில் மோசடியின் முழு பின்னணி மற்றும் தொடர்புடையவர்களின் விவரங்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.