திருமணம் என்பது கணவன் – மனைவி இருவரும் சம உரிமையுடனும், பரஸ்பர மரியாதையுடனும் வாழ வேண்டிய உறவே தவிர, ஒருவரின் சுதந்திரத்தை மற்றொருவர் கட்டுப்படுத்தும் உரிமையை வழங்குவதில்லை என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கணவர் அல்லது அவரது குடும்பத்தினரின் அனுமதியின்றி மனைவி தனது பெற்றோர் வீட்டுக்குச் செல்வது தவறாகக் கருத முடியாது என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. மனைவியின் தனிப்பட்ட விருப்பம், சுதந்திரம் மற்றும் முடிவெடுக்கும் உரிமையை திருமணத்தின் பெயரில் கட்டுப்படுத்த முடியாது எனவும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. கணவன் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி டாக்டர் சில்லக்கூர் சுமலதா இந்தக் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். குடும்ப நீதிமன்றம் வழங்கிய மாதாந்திர பராமரிப்புத் தொகை உத்தரவை எதிர்த்து கணவர் இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

மனைவி தனது பெற்றோர் வீட்டுக்கு கணவர் அல்லது அவரது பெற்றோரின் அனுமதியின்றி அடிக்கடி சென்று வந்ததாகவும், வீட்டுப் பணிகளை சரிவரச் செய்யவில்லை என்றும், தனது பெற்றோரை கவனிக்கவில்லை என்றும் கணவர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. மேலும், தான் கூலித் தொழிலாளியாக இருப்பதால் குடும்பச் செலவுகளைச் சமாளிப்பது கடினமாக இருப்பதாகவும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். இதற்கு மனைவி தரப்பில், திருமணமான ஆரம்பகாலத்தில் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்ததாகவும், பின்னர் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரால் துன்புறுத்தலுக்கு ஆளானதாகவும் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் பரிசீலித்த நீதிமன்றம், மனைவியின் பெற்றோர் வீட்டுக்குச் செல்வதை கட்டுப்படுத்துவது அவரது தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடும் செயலாகும் எனக் குறிப்பிட்டது. மேலும், மனைவி கணவனின் குடும்பத்தினரை கவனிப்பது கட்டாயக் கடமை அல்ல என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வீட்டுப் பணிகளையும் குடும்பப் பொறுப்புகளையும் ஆண், பெண் இருவரும் சமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் கர்நாடக உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. கணவனின் பெற்றோரை கவனிப்பது மனைவிக்கு கட்டாயமாக்கப்படக் கூடாது என்றும், அத்தகைய பொறுப்பு விருப்பத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. ஒருவரது குடும்பத்தில் திருமணம் செய்து கொண்டதற்காக அவரது தனிப்பட்ட சுதந்திரத்தையும் விருப்பத்தையும் பறிக்க முடியாது எனவும் நீதிபதி சுமலதா குறிப்பிட்டார். மனைவியின் குடும்பப் பாசத்தையும் அர்ப்பணிப்பையும் அவர் எவ்வளவு கீழ்ப்படிகிறார் என்பதன் அடிப்படையில் அளவிட முடியாது என்றும் நீதிமன்றம் கூறியது. திருமணம் என்பது சமமற்ற இரு நபர்களுக்கு இடையேயான உறவு அல்ல என்றும், பாலினத்தின் அடிப்படையில் பெண்ணின் சுதந்திரத்தை கட்டுப்படுத்துவது அரசமைப்புச் சட்டத்தின் சமத்துவக் கொள்கைக்கும் மனித மாண்புக்கும் எதிரானது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கில் குடும்ப நீதிமன்றம் உத்தரவிட்டபடி, கணவர் தனது மனைவிக்கு மாதந்தோறும் ரூ.9,000 பராமரிப்புத் தொகையாக வழங்க வேண்டும் என்ற உத்தரவையும் கர்நாடக உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. இதில் மனைவி மற்றும் சிறார் குழந்தைக்காக தலா ரூ.150 வீதம் தினசரி செலவாகும் வகையில் கணக்கிடப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்தது. தற்போதைய விலைவாசி உயர்வு மற்றும் வாழ்க்கைச் செலவுகளை கருத்தில் கொள்ளும்போது, இந்தத் தொகை குறைந்தபட்ச தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கே போதுமானதாக இருக்காது என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது. இதையடுத்து கணவர் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் நிராகரித்தது. திருமண உறவில் இருவருக்கும் சமமான மரியாதையும் சுதந்திரமும் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்திய இந்தக் கருத்துகள், பெண்களின் தனிப்பட்ட உரிமைகள் மற்றும் குடும்ப உறவுகளில் சமத்துவம் குறித்த முக்கியமான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.