மறைந்த நடிகர் மற்றும் தேமுதிக நிறுவனத் தலைவரான விஜயகாந்தின் 74ஆவது பிறந்தநாள் விழா ஆகஸ்ட் 25 அன்று தமிழகம் முழுவதும் கட்சிகளாலும் தொண்டர்களாலும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இந்தச் சிறப்பு நாளை முன்னிட்டு தேமுதிக சார்பில் ‘வறுமை ஒழிப்பு தினம்’ அனுசரிக்கப்பட்டு, பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
கடலூரில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் பொருளாளர் எல்.கே.சுதீஷ் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அப்போது அவர்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான சாட் ஜிபிடி குறித்து வெளியிட்ட சுவாரஸ்யமான தகவல்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் நகைச்சுவையுடன் வைரலாகி வருகின்றன.
செய்தியாளர்களைச் சந்திப்பின்போது பேசிய எல்.கே.சுதீஷ், “தமிழகச் சட்டப்பேரவையில் முதல்முறையாகப் போட்டியிட்டு வெற்றிபெற்ற சட்டமன்ற உறுப்பினர்களில் யார் சிறப்பாகச் செயல்படுகிறார்கள் என்று சாட் ஜிபிடியில் தேடினால், அதில் பிரேமலதா விஜயகாந்தின் பெயர் தான் முதலிடத்தில் வருகிறது” என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து பேசிய பிரேமலதா விஜயகாந்த், “எல்.கே.சுதீஷ் தற்போதுதான் முதன்முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றுள்ளார். அவரும் நாடாளுமன்றத்தில் மக்களுக்காகவும் தமிழ்நாட்டின் உரிமைக்காகவும் மிகச் சிறப்பாகக் குரல் கொடுத்து வருகிறார். நாடாளுமன்றத்தில் எந்த எம்பி சிறப்பாகச் செயல்படுகிறார் என்று சாட் ஜிபிடியில் போட்டால் எல்.கே.சுதீஷின் பெயர்தான் முதலில் வருகிறது; இதைக் தனிப்பட்ட முறையில் நாங்கள் சொல்லவில்லை, நவீன தொழில்நுட்பமான சாட் ஜிபிடி-யே சொல்கிறது” என்று கூறி சிரித்தவாறே தெரிவித்தார்.
இரு தலைவர்களும் ஒருவரையொருவர் சாட் ஜிபிடி தரவுகளை வைத்து மாறி மாறிப் புகழ்ந்து கொண்ட இந்தச் சந்திப்பு குறித்த வீடியோ தற்போது இணையவாசிகளிடையே அதிக அளவில் பகிரப்பட்டு வருவதோடு, பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
