மேற்கு வங்க மாநிலம் துர்காப்பூரில் அமைந்துள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் புதிதாகச் சேரும் மாணவர்களுக்காக நடத்தப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றின்போது எதிர்பாராத பரபரப்புச் சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் மேடையில் கறுப்பு நிற டீ-ஷீட் அணிந்து கொண்டு பிரபல பாலிவுட் பாடலான ‘சிக்னி சமேலி’ பாடலுக்கு இரண்டு மாணவர்கள் குத்தாட்டம் போட்டுள்ளனர். மாணவர்கள் நடனமாடத் தொடங்கிய சில விநாடிகளிலேயே, அங்கிருந்த பேராசிரியர் ஒருவர் திடீரென மேடைக்கு வந்து பாதியிலேயே இசையை நிறுத்தச் சொல்லித் தனது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.
View this post on Instagram
இதனைத் தொடர்ந்து மைக் மூலம் மாணவர்களிடம் கேள்வி எழுப்பிய அந்தப் பேராசிரியர், இது போன்ற நடனங்களை மேடையில் நிகழ்த்த முன்பதிவு அல்லது அனுமதி பெறப்பட்டுள்ளதா என்று கண்டிப்புடன் விசாரித்துள்ளார். மேலும், இது கல்லூரிக் கலாச்சாரத்திற்குப் பொருந்துமா அல்லது வெறும் கேலிக்கூத்தா என்று கேள்வி எழுப்பிய அவர், மாணவர்கள் தங்களது வரம்பை அறிந்து நடந்து கொள்ள வேண்டும் என்றும் எச்சரித்துள்ளார். இது தொடர்பான குறுகிய வீடியோ கிளிப் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவத்திற்கு நெட்டிசன்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. ஒரு தரப்பினர் கல்வி நிறுவனங்களின் மதிப்பைக் குலைக்கும் வகையில் இது போன்ற பாடல்களுக்கு ஆட்டம் போடுவது முறையல்ல என்று மாணவர்களைக் கண்டித்து வரும் நிலையில், மற்றொரு தரப்பினர் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இதனைத் தடுத்திருக்க வேண்டியதுதானே என்று ஏற்பாட்டாளர்களைக் கேள்வி எழுப்பி வருகின்றனர். மாணவர்களின் சுதந்திரம் மற்றும் கல்வி நிலையங்களின் மரபுகள் குறித்த விவாதங்களை இந்தச் சம்பவம் மேலும் தீவிரப்படுத்தியுள்ளது
