குளிர்காலம் என்பது பலருக்குக் கொண்டாட்டமான காலமாக இருந்தாலும், சிலருக்கு அது இனம் புரியாத மனச்சோர்வையும் மந்தநிலையையும் ஏற்படுத்துகிறது. இதனை மருத்துவ உலகில் ‘பருவகால மனச்சோர்வு’ என்று அழைக்கின்றனர். பனிக்காலத்தில் வழக்கமாகப் பிடித் செயல்களில் கூட ஆர்வம் இல்லாமல் போவது, சோகம், ஊக்கமின்மை மற்றும் அதிகப்படியான சோர்வு ஏற்படுவது இதன் முக்கிய அறிகுறிகளாகும்.
டென்மார்க், நார்வே, கனடா மற்றும் அமெரிக்கா போன்ற பனிப்பொழிவு அதிகம் உள்ள நாடுகளில் நவம்பர் முதல் மார்ச் வரையிலான காலத்தில் இந்தப் பாதிப்பு அதிகமாகக் காணப்படும். இக்காலகட்டத்தில் பகல் பொழுது குறைவாகவும், இரவு நீண்டதாகவும் இருப்பதால் மக்களுக்குப் போதிய அளவு சூரிய ஒளி கிடைப்பதில்லை. இந்தச் சூரிய ஒளி இன்மையே மனநிலை மாற்றங்களுக்கு மிக முக்கியமான காரணமாக அமைகிறது.
சூரிய ஒளி குறையும் போது, நமது மூளையில் மகிழ்ச்சியான மனநிலைக்குக் காரணமான ‘செரோடோனின்’ என்ற ரசாயனத்தின் அளவு குறைகிறது. அதே நேரத்தில் இருள் அதிகமாக இருப்பதால், தூக்கத்தைத் தூண்டும் ‘மெலடோனின்’ ஹார்மோன் அதிக அளவில் உற்பத்தியாகி எப்போதும் சோர்வையும் அதிகத் தூக்கத்தையும் தருகிறது. மேலும் உடலுக்குத் தேவையான வைட்டமின் டி குறைவதும் மனச்சோர்வை அதிகரிக்கிறது.
இந்தச் சூழலை எதிர்கொள்ளப் பகல் நேரத்தில் வீட்டிற்குள்ளேயே முடங்கி இருக்கக் கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். சூரிய ஒளி படும் இடங்களில் சிறிது நேரமாவது உலாவ வேண்டும். அதேபோல் நண்பர்கள் மற்றும் உறவினர்களைச் சந்தித்துப் பேசுவதும், மனதை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வதும் மனச்சோர்விலிருந்து விடுபடப் பெரிதும் உதவும்.
இதனுடன் உடற்பயிற்சியைத் தவறாமல் செய்வதும், ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வதும் பருவகால மனச்சோர்வைச் சமாளிப்பதற்கான சிறந்த வழிகளாகும். மனச்சோர்வை ஏற்படுத்தும் ஹார்மோன் மாற்றங்களை இயற்கை வழியிலும், நேர்மறையான வாழ்க்கை முறையினாலும் எளிதாகக் கடந்துவிட முடியும் என்பதே மருத்துவர்களின் உறுதியான கருத்தாகும்.
