தினமும் மாலை வேளையில் லேசான பசி எடுப்பது இயல்புதான். அந்த நேரத்தில் பெரும்பாலானோர் வடை, பஜ்ஜி, சமோசா போன்ற எண்ணெயில் பொரித்த நொறுக்குத்தீனிகளையே நாடுகின்றனர். ஆனால், உடலுக்கு எவ்வித கெடுதலும் செய்யாத, அதேசமயம் சுவையான ஒரு மாற்றை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், அதற்குச் சிறந்த தேர்வு ‘மக்கானா’ (தாமரை விதைகள்) ஆகும். மாலை நேர டீ அல்லது காபியுடன் சாப்பிட இது மிகவும் பொருத்தமானது.
மிகவும் எளிமையாகவும் விரைவாகவும் செய்யக்கூடியது இந்த நெய் ரோஸ்ட் மக்கானா. ஒரு வாணலியில் சிறிதளவு நெய் விட்டு, அதில் மக்கானாவைச் சேர்த்து மிதமான தீயில் மொறுமொறுப்பாகும் வரை வறுக்க வேண்டும். பின்னர், அதில் தேவையான அளவு உப்பு மற்றும் மிளகுத்தூள் தூவி நன்கு கிளறினால், சுவையான மக்கானா ரெசிபி தயார். இது மாலை நேர டீக்கு மிகச்சிறந்த காம்பினேஷனாக இருக்கும்.
ஸ்பைசியான உணவுகளை விரும்புவோருக்கு மசாலா மக்கானா சிறந்த தேர்வாகும். நெய்யில் வறுத்த மக்கானாவுடன் சில்லி பவுடர், சாட் மசாலா மற்றும் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து மிதமான சூட்டில் வதக்க வேண்டும். மசாலாக்கள் மக்கானாவுடன் நன்றாக ஒட்டிக்கொள்ளும் வரை வதக்கி இறக்கினால், நாவில் எச்சில் ஊறவைக்கும் மசாலா மக்கானா தயார். இது டீயுடன் சாப்பிடும் போது அருமையான அனுபவத்தைத் தரும்.
மக்கானாவில் புரதச்சத்து மற்றும் நார்ச்சத்தும் நிறைந்துள்ளதால், உடலுக்குத் தேவையான ஆற்றலைத் தருவதோடு எடையைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. எவ்வித சிரமமும் இன்றி சில நிமிடங்களிலேயே தயார் செய்யக்கூடிய இந்த மக்கானா ஸ்நாக்ஸ், மாலை நேர பசியைப் போக்குவதோடு உங்கள் டீ பிரேக்கை மேலும் சுவாரசியமாகவும் ஆரோக்கியமாகவும் மாற்றும்.
