ஆன்மிக மாதமாகக் கருதப்படும் ஆடி மாதத்தில் வரும் பல விசேஷ நாள்களில், தமிழர்களால் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படும் பண்டிகை ஆடிப்பெருக்கு ஆகும். மற்ற இந்து மதப் பண்டிகைகள் திதி அடிப்படையில் கொண்டாடப்பட்டாலும், ஆடிப்பெருக்கு மட்டும் தமிழ் மாதத்தின் ஆடி 18-ஆம் நாள் அடிப்படையில் கணக்கிடப்பட்டு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான ஆடிப்பெருக்கு வரும் ஆகஸ்ட் 3, 2026 (திங்கட்கிழமை) இன்று கொண்டாடப்படுகிறது. தேய்பிறை பஞ்சமி திதியும், உத்திரட்டாதி நட்சத்திரமும் இணைந்துவரும் இந்நாளில் தாலிக்கயிறு மாற்றுவது, புதிய தங்கம் மற்றும் நிலம் வாங்குவது, சுபகாரியங்களைத் தொடங்குவது போன்ற நற்செயல்களைச் செய்வது வழக்கம். பொதுவாக ஆடி மாதத்தில் சுபநிகழ்ச்சிகள் தவிர்க்கப்பட்டாலும், ஆடிப்பெருக்கு நாளில் செய்யப்படும் நற்காரியங்களின் பலன் பல மடங்கு பெருகும் என்பது மக்களின் ஐதீகமாக உள்ளது.
ஆடிப்பெருக்கு நாளான திங்கட்கிழமையன்று தாலிக்கயிறு மாற்றவும், புதிய காரியங்களைத் தொடங்கவும் உகந்த நேர விவரங்கள் பற்றி பாப்போம். அதன்படி சூரிய உதயத்திற்குப் பிறகு காலை 6.00 மணி முதல் 7.30 மணிக்குள் தாலிக்கயிறு மாற்றிக் கொள்ளலாம். மேலும், பகல் வேளையில் காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை மற்றும் மாலையில் 04.45 மணி முதல் 05.45 மணி வரை நல்ல நேரம் உள்ளது. கௌரி நல்ல நேரமாகக் கருதப்படும் மதியம் 1.45 மணி முதல் 2.45 மணி வரையும் சுப காரியங்களை மேற்கொள்ளலாம்.
தவிர்க்க வேண்டிய வேளைகள்:
-
ராகு காலம்: காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை
-
எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை
-
குளிகை: மதியம் 1.30 மணி முதல் 3.00 மணி வரை
மேற்கண்ட இராகு காலம், எமகண்டம் மற்றும் குளிகை நேரங்களைத் தவிர்த்து, மற்ற உகந்த வேளைகளில் பெண்கள் வீட்டிலோ, நீர்நிலைகளின் கரைகளிலோ அல்லது கோயில்களிலோ தாலிச் சரடை மாற்றிக் கொள்ளலாம். தங்கம் மற்றும் நிலம் வாங்க நினைப்பவர்களும் குறிப்பிட்ட நல்ல நேரங்களைப் பயன்படுத்திக் கொண்டு, உரிய வழிபாடுகளுடன் ஆடிப்பெருக்கு நாளைச் சிறப்பாகக் கொண்டாடலாம்.
