விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த தொழிலதிபர் சவுந்தரராஜன், லாரிகள் மூலம் சரக்கு போக்குவரத்து தொழிலை நடத்தி வருகிறார். அவரிடம் தமிழக வெற்றிக் கழகத்தின் அருப்புக்கோட்டை நகர் செயலாளர் கார்த்திகேயன் மற்றும் வடக்கு, மேற்கு இணை செயலாளர் சதீஷ்குமார் ஆகியோர் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர், மாவட்டம் முழுவதும் செயல்படும் டாஸ்மாக் கடைகளுக்கு மதுபானங்களை லாரிகளில் கொண்டு செல்லும் போக்குவரத்து ஒப்பந்தத்தை பெற்றுத் தருவதாக நம்பிக்கை அளித்துள்ளனர்.
அந்த ஒப்பந்தத்தை பெறுவதற்கு உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் மதுவிலக்குத்துறை அமைச்சருக்கு பணம் வழங்க வேண்டியிருப்பதாகக் கூறி, சவுந்தரராஜனிடம் ரூ.22 லட்சம் பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், ஒப்பந்தம் கிடைத்த பிறகும் கூடுதல் தொகை செலுத்த வேண்டும் என வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த சவுந்தரராஜன், இந்த விவகாரத்தின் உண்மைத்தன்மையை நேரடியாக அமைச்சரிடமே உறுதிப்படுத்த முடிவு செய்தார்.
இதையடுத்து, அமைச்சர் விக்னேஷை நேரில் சந்தித்து நடந்த சம்பவம் குறித்து சவுந்தரராஜன் விளக்கம் கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது, தனது பெயரை பயன்படுத்தி யாரிடமும் பணம் வசூலிக்க எந்தவித அனுமதியும் வழங்கப்படவில்லை என்றும், இந்த சம்பவத்துக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அமைச்சர் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்தவும் நடவடிக்கை எடுக்கவும் அவர் தனது உதவியாளர் மூலம் போலீசில் புகார் அளிக்கச் செய்ததாக கூறப்படுகிறது.
அந்த புகாரின் அடிப்படையில் விருதுநகர் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, கார்த்திகேயன் மற்றும் சதீஷ்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த மோசடி வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் கோவையைச் சேர்ந்த பிரசாந்த் உத்தமன் என்பவர் தலைமறைவாக இருப்பதாகவும், அவரை போலீசார் தீவிரமாக தேடி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
