உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில், கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் கொடூரமான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. 30 வயதான பிரீத்தி என்ற பெண், தனது உறவினர் திருமணத்திற்காக தாய் வீட்டிற்குச் செல்ல அனுமதி கேட்டுள்ளார்.
இதற்கு அவரது கணவர் ஸ்ரவண் கஷ்யப் மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கணவர், தனது மனைவியின் மூக்கை பற்களால் கடித்துக் காயப்படுத்தியுள்ளார். ரத்த வெள்ளத்தில் இருந்த மனைவி, உடனடியாக தனது தாய்க்கு போன் செய்து நடந்ததைக் கூறியுள்ளார்.
மகளின் நிலையைக்கண்டு ஆவேசமடைந்த தாயார், உடனடியாக மருமகன் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு நடந்த கடும் வாக்குவாதத்தின்போது, ஆத்திரத்தில் இருந்த பிரீத்தியின் தாய், தனது மருமகனின் தங்கையின் மூக்கை பற்களால் கடித்துக் காயப்படுத்தியுள்ளார்.
“மூக்கிற்கு மூக்கு” என்ற ரீதியில் நடந்த இந்த விசித்திரமான மற்றும் கொடூரமான தாக்குதல் சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். தற்போது காயமடைந்த இரண்டு பெண்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இரு தரப்பிலும் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், காவல் துறையினர் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
