கேரளாவைச் சேர்ந்த இஸ்மாயில் என்பவர், 1991-ம் ஆண்டு தனது நண்பர் எட்லா லச்சண்ணாவிடம் வாங்கிய 1,000 ரூபாயைத் திருப்பித் தருவதற்காக, பல ஆண்டுகள் தேடிச் சென்று கண்டுபிடித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 35 ஆண்டுகளுக்கு முன்பு சவூதி அரேபியாவில் ஒன்றாக வேலை செய்தபோது, இஸ்மாயில் தனது நண்பரிடம் 120 சவூதி ரியால்களை (சுமார் 1,000 ரூபாய்) கடனாக வாங்கியிருந்தார்.

அதன் பிறகு இருவரும் பிரிந்துவிட்ட நிலையில், தொடர்பு கொள்ள எந்தவிதமான முகவரியோ, தொலைபேசி எண்ணோ இல்லாத சூழலில், தனது நண்பரை எப்படியாவது கண்டுபிடித்துக் கடனைத் திருப்ப வேண்டும் என்று இஸ்மாயில் உறுதியாக இருந்தார்.

இஸ்மாயில் நண்பரின் ஊர் பெயரை மட்டுமே வைத்துக்கொண்டு பல முயற்சிகளுக்குப் பிறகு, லச்சண்ணாவின் வீட்டைத் தேடி கண்டுபிடித்தார். 1,000 ரூபாய்க்குப் பதிலாக, வட்டியுடன் சேர்த்து 25,000 ரூபாயை நண்பரின் குடும்பத்தாரிடம் கொடுத்து தனது நன்றிக்கடனைத் தீர்த்தார்.

அப்போது நண்பர் லச்சண்ணா சவூதியில் வேலை செய்துகொண்டிருந்ததால், இருவரும் வாட்ஸ்அப் வீடியோ காலில் பேசிக்கொண்டனர். பல தசாப்தங்களுக்குப் பிறகும் கொடுத்த வாக்கை மறக்காமல் வந்து உதவிய இஸ்மாயிலின் நேர்மையையும், நட்பையும் கண்டு லச்சண்ணா நெகிழ்ந்து போனார். இச்சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.