ஜார்க்கண்ட் மாநிலத்தில் பள்ளிக்குச் சென்ற 10-ஆம் வகுப்பு மாணவி லட்சுமி முண்டா, மாலை வீடு திரும்பியபோது தன் வீடு இடிக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போனாள்.

முறையான முன் அறிவிப்பு எதுவுமின்றி, மாநகராட்சி நிர்வாகம் அந்தப் பகுதியை ஆக்கிரமிப்பு என்று கூறி புல்டோசர் மூலம் இடித்துத் தள்ளியது. விஞ்ஞானி ஆக வேண்டும் என்ற கனவோடு இருந்த அந்தச் சிறுமியின் புத்தகங்களும், படிப்பும் மழையில் நனைந்து வீணான காட்சி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

15 ஆண்டுகளாக அந்த இடத்தில் சிறிய கடை நடத்தி வாழ்வாதாரத்தை நடத்தி வந்த லட்சுமியின் தாய் சரிதா முண்டா, இப்போது செய்வதறியாது வீதியோரத்தில் நிற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் ஊடகங்களில் பெரும் பேசுபொருளானதைத் தொடர்ந்து, ராஞ்சி மாநகராட்சி மேயர் ரோஷினி கல்கோ நள்ளிரவில் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சந்தித்து ஆறுதல் கூறினார். அதிகாரிகளின் இந்தச் செயல் குறித்து தனக்குத் தெரியாது என்று கூறிய அவர், இக்குடும்பத்தை உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

மேலும், இந்த ஏழைக்குடும்பத்திற்கு அரசு சார்பில் விரைவில் நிரந்தரக் குடியிருப்பு வசதி செய்து தருவதாகவும் வாக்குறுதி அளித்துள்ளார். வளர்ச்சி என்ற பெயரில் ஏழைகளின் வாழ்வாதாரமும், மாணவியின் கல்வியும் பறிக்கப்படுவது சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் கண்டனத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.