இத்தாலி – ஆஸ்திரியா எல்லைப் பகுதியில் உள்ள ஆல்ப்ஸ் மலைப் பனிப்பாறைகளில் கடந்த 1991-ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்ட ‘ஓட்ஸி’ என்ற பனிமனிதனின் உடலில் நடத்தப்பட்ட புதிய ஆய்வு, உலக விஞ்ஞானிகளை உறைந்து போகச் செய்துள்ளது. எகிப்து பிரமிடுகள் கட்டுவதற்கும் முந்தைய காலத்தைச் சேர்ந்த, அதாவது சுமார் 5300 ஆண்டுகள் பழமையான இந்த மம்மியின் உடலுக்குள், கடுமையான குளிரிலும் உயிர்வாழக்கூடிய ஈஸ்ட் மற்றும் பண்டைய கால வயிற்று நுண்ணுயிரிகள் இன்னும் உயிருடன் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ‘மைக்ரோபையோம்’ என்ற புகழ்பெற்ற அறிவியல் இதழில் வெளியாகியுள்ள இந்த ஆய்வு முடிவின்படி, இறக்கும் போது 25 முதல் 35 வயதுடையவராகவும், 5 அடி 2 அங்குல உயரமும் கொண்ட இந்த பனிமனிதன், மனித வரலாற்றின் நுண்ணுயிரி பரிணாம வளர்ச்சியைப் புரிந்துகொள்ளும் அரிய சான்றாக மாறியுள்ளதாக ஆய்வாளர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
கடந்த 1991-ஆம் ஆண்டு ஜெர்மனியைச் சேர்ந்த இரு சுற்றுலாப் பயணிகளால் தற்செயலாகக் கண்டறியப்பட்ட இந்த ஓட்ஸியின் உடலில் அம்பு தைத்த வடுக்கள் இருந்ததால், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்பது கார்பன் டேட்டிங் சோதனையில் ஏற்கனவே தெரியவந்தது. தற்போது தென் டைரோல் தொல்லியல் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் இந்த உடலின் உட்புற அணுக்கள் வரை ஆய்வு செய்தபோது, நவீன மனிதர்களிடம் காணப்படாத சில தனித்துவமான பாக்டீரியாக்கள் இன்றும் அவரிடம் உயிருடன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மிகக் கடுமையான மற்றும் சாதகமற்ற சூழ்நிலைகளிலும் சில நுண்ணுயிரிகளால் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் உயிர்வாழ முடியும் என்பதை இந்த ஆய்வு நிரூபித்துள்ளது. இக்கண்டுபிடிப்பு பண்டைய மனிதர்களின் ஆரோக்கியம் மற்றும் உணவு முறையை அறிய உதவுவதோடு மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் செவ்வாய் உள்ளிட்ட பிற கிரகங்களில் உயிரினங்களைத் தேடும் விண்வெளி ஆராய்ச்சிக்கும் ஒரு புதிய வழிகாட்டியாக அமையும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
