இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், தற்போது இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக ‘தி டெலிகிராப்’ நாளிதழ் வெளியிட்டுள்ள அறிக்கை உலக கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான உள்நாட்டு டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 1-2 என்ற கணக்கில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அதன் டெஸ்ட் பயிற்சியாளராக இருந்த பிரண்டன் மெக்கல்லம் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் மதிப்புமிக்க ஆஷஸ் தொடருக்கு அணியைத் தயார்படுத்தும் நோக்கில், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் புதிய பயிற்சியாளரைத் தேடி வருகிறது. இதற்கான உத்தேசப் பட்டியலில் ராகுல் டிராவிட்டின் பெயர் முன்னணியில் உள்ள நிலையில், அவருடன் ஆண்டி பிளவர் மற்றும் ரிச்சர்ட் டாசன் ஆகியோரின் பெயர்களும் பரிசீலனையில் உள்ளன. இதே போன்று இந்திய முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் அஸ்வின் பெயரும் டெஸ்ட் கிரிக்கெட்டின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2024 டி20 உலகக் கோப்பையை இந்தியாவுக்கு வென்று தந்த டிராவிட்டின் அபார அனுபவம் மற்றும் துல்லியமான திட்டமிடல் காரணமாக, இங்கிலாந்து வாரியம் அவரை இந்த முக்கியப் பதவிக்குக் கொண்டுவர தீவிர ஆர்வம் காட்டி வருகிறது. முழுநேரப் பயிற்சியாளராகச் செயல்பட டிராவிட் தற்போது விரும்பவில்லை என்றாலும், இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கால அட்டவணை அவருக்குப் போதிய குடும்ப ஓய்வு நேரத்தை வழங்கும் என்பதால் அவர் இந்த வாய்ப்பை ஏற்கக்கூடும் எனக் கூறப்படுகிறது.
டிராவிட்டின் விருப்பத்திற்கேற்ப சில சலுகைகளை வழங்கவும் இங்கிலாந்து வாரியம் தயாராக இருப்பதாகத் தெரிகிறது. அதேநேரம், நீக்கப்பட்ட மெக்கல்லம் இங்கிலாந்தின் ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் பயிற்சியாளராகத் தொடர்ந்து நீடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
