கோவை பொள்ளாச்சி அருகே ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் முதல் மாநாடு நேற்று அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது. ‘போதையில்லா தமிழ்நாடு’ என்ற ஒற்றை இலக்குடன் நடத்தப்பட்ட இம்மாநாட்டில் தற்போதைய த.வெ.க. அரசு குறித்தும், முதலமைச்சர் விஜய் குறித்தும் அண்ணாமலை ஆரோக்கியமான அரசியல் கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். இது மற்றொரு கட்சியையோ அல்லது தலைவரையோ விமர்சிப்பதற்கான மாநாடு அல்ல என்று குறிப்பிட்ட அவர், 2026 சட்டமன்றத் தேர்தலில் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் வாக்களித்து இந்த அரசைத் தேர்ந்தெடுத்துள்ளதால் அதற்கு நாம் மதிப்பளிக்க வேண்டும் என்றார்.
மேலும், த.வெ.க. அமைச்சரவையில் கே.ஏ.செங்கோட்டையனைத் தவிர மற்ற அனைவரும் புதியவர்கள் என்பதால், புதியவர்களைக் கீழே அமுக்காமல் தூக்கிவிட வேண்டும் என்பதில் தங்களது இயக்கம் தெளிவாக உள்ளதாகவும், இனிமேல் விஜய்யை ‘சிஎம் சார்’ என்றே அழைப்போம் என்றும் அண்ணாமலை நாகரிக அரசியல் பாணியை வெளிப்படுத்தியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கோவில்களுக்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூடுவோம் என உத்தரவிட்டு 717 கடைகளை மூடியதாக அரசு அறிவித்த போதிலும், தங்களது கள ஆய்வின்படி இன்னமும் நூற்றுக்கணக்கான டாஸ்மாக் கடைகள் விதிமுறைகளை மீறி 100 மீட்டருக்குள் இயங்கி வருவதைச் சுட்டிக்காட்டினார். இது போன்ற மக்கள் நலன் சார்ந்த விஷயங்களில் அரசுக்கு ஆரோக்கியமான முறையில் தங்களது இயக்கம் அழுத்தம் கொடுக்கும் என்று கூறினார்.
ஆணவத்தோடு அரசியல் செய்பவர்களைத் தமிழ்நாட்டு மண் ஏற்றுக்கொள்ளாது என்பதற்கு 2026 தேர்தலே சாட்சி எனக் குறிப்பிட்ட அண்ணாமலை, தங்களது அமைப்பு 2031-ஆம் ஆண்டு மக்களின் முன்னிலையில் ஒரு முழுமையான அரசியல் கட்சியாகத் தேர்தலைச் சந்திக்கும் என்றும், இந்த த.வெ.க. அரசின் பதவிக்காலம் முடியும் போது தமிழ்நாட்டின் கடன் சுமை சுமார் 15 லட்சம் கோடியாக உயரும் அபாயம் உள்ளதாகவும், அதனைத் தங்களது மாற்று அரசியல் மூலமே தீர்க்கப் போவதாகவும் அதிரடியாகப் பேசினார்.
