திருச்சி மாவட்ட மணக்கால் பகுதியில் நேற்று முன்தினம் இரவு நிகழ்ந்த கொடூரமான ரெயில் விபத்து, அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலிருந்து திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்த ரெயில் முன், இரவு 11 மணியளவில் திடீரென ஒரு ஆண் மற்றும் பெண் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இருவம் பலியான நிலையில், தகவலறிந்து வந்த ரெயில்வே போலீசார் உடல்களைக் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில், தற்கொலை செய்து கொண்டவர்கள் புவனேஸ்வரி (26) மற்றும் 17 வயது கல்லூரி மாணவர் என்பது தெரியவந்தது. இவர்களுக்கிடையே இருந்த உறவுமுறை கள்ளக்காதலாக மாறியதே இந்த விபரீத முடிவுக்குக் காரணம் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
மரணமடைந்த புவனேஸ்வரிக்கு திருமணமாகி 9 வயதில் ஒரு மகளும், 7 வயதில் ஒரு மகனும் உள்ள நிலையில், தனது உறவினரான 17 வயது சிறுவனுடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கல்லூரியில் பட்டயப் படிப்பு படித்து வந்த அந்த சிறுவனுக்கும், புவனேஸ்வரிக்கும் இடையேயான இந்த ரகசிய காதல் விவகாரம் இருதரப்பு குடும்பத்தினருக்கும் தெரியாமல் இருந்துள்ளது. சம்பவத்தன்று, சிறுவன் கடைக்குச் செல்வதாகப் பெற்றோரிடமும், புவனேஸ்வரி பூண்டி மாதா கோவிலுக்குச் செல்வதாகக் கணவரிடமும் பொய் கூறிவிட்டு வீட்டைவிட்டு வெளியேறியுள்ளனர்.
பின்னர் இருவரும் மோட்டார் சைக்கிளில் பல்வேறு இடங்களுக்குச் சுற்றிவிட்டு, இரவில் ரெயில்வே கேட் பகுதிக்கு வந்துள்ளனர். அங்கு பைக்கை நிறுத்திவிட்டு, மின்னல் வேகத்தில் வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டனர். மேலும் இவர்கள் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
