ஹரியானா மாநிலம் குருகிராமில் ஒரே தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இரண்டு இளம் மென்பொருள் பொறியாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த 25 வயதான ஸ்ரேஷ்ட் மாலிக் மற்றும் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதான இஷாரா அயூபி ஆகிய இருவரும் காதலித்து வந்துள்ளனர். இஷாரா கடந்த சில நாட்களுக்கு முன்புதான் குருகிராம் செக்டர் 55-ல் உள்ள ஸ்ரேஷ்ட் தங்கியிருந்த பிஜி விடுதிக்கு வந்து, அவருடன் சேர்ந்து வாழத் தொடங்கியுள்ளார்.

இந்த நிலையில், கடந்த சனிக்கிழமையன்று இஷாராவின் பெற்றோர் மகளைத் தொடர்பு கொள்ள முயன்றும் அவர் அழைப்பை ஏகாததால், சந்தேகமடைந்து போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு சென்று கதவை உடைத்துப் பார்த்தபோது, இஷாரா ரத்த வெள்ளத்தில் கத்தியால் குத்தப்பட்டு சடலமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதோடு அவரைப் படுகொலை செய்த ஸ்ரேஷ்ட் மாலிக், அங்கிருந்து தப்பி ஓடி அருகிலுள்ள கர்ஹி ரயில் நிலையம் அருகே ஓடும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. ரயில் தண்டவாளத்தில் இரு துண்டுகளாகக் கண்டெடுக்கப்பட்ட அவரது சடலத்தின் அருகில் இருந்த மொபைல் போன் மூலமாகவே, அவர்தான் இஷாராவைக் கொலை செய்தவர் என்பது உறுதி செய்யப்பட்டது. இருவரும் ஒன்றாக வாழத் தொடங்கிய மூன்று நாட்களிலேயே இந்த பயங்கர விபரீதம் நடந்துள்ளது.

மேலும் காதலர்களுக்கிடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதம் காரணமாக ஸ்ரேஷ்ட் இஷாராவைக் கொலை செய்துவிட்டு, பயத்தில் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். தற்போது இவர்களது மொபைல் போன்கள், வாட்ஸ்அப் சாட்டுகள் மற்றும் லொகேஷன் தரவுகளைக் கொண்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.