தலைமைச் செயலகத்தில் பொதுப்பணித்துறையின் செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த உயர்மட்டக் கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, துறைச் செயலாளர் செல்வராஜ் மற்றும் முக்கிய அரசு அதிகாரிகள் பலர் நேரில் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் பொதுப்பணித்துறையின் கீழ் தற்போது நடைபெற்று வரும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து முதலமைச்சர் விஜய் விரிவாகக் கேட்டறிந்தார்.
முக்கியமாக, தமிழகத்தில் உள்ள பழமையான பாரம்பரிய கட்டிடங்களைப் பாதுகாப்பது, அவற்றை முறையாகப் புதுப்பிப்பது மற்றும் சீரமைப்பது தொடர்பாக இந்த ஆலோசனையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. மேலும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கட்டப்பட்டு வரும் நினைவகங்கள் மற்றும் மணிமண்டபங்களின் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிப்பது குறித்தும், அவற்றின் தற்போதைய நிலை குறித்தும் அமைச்சர் மற்றும் செயலாளருடன் முதலமைச்சர் விஜய் தீவிரமாக ஆலோசனை நடத்தினார்.
