சென்னை பெரம்பூர் பகுதியில் புதிய சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தைத் திறந்து வைப்பதற்காக முதலமைச்சர் விஜய் இன்று வருகை தந்தார். அப்போது, தங்களது பிரியமான தலைவரைக் காண்பதற்கும், வரவேற்பு அளிப்பதற்கும் ஆயிரக்கணக்கான தொண்டர்களும் பொதுமக்களும் அப்பகுதியில் முன்கூட்டியே திரண்டனர். இதனால் அந்த இடமே மக்கள் கூட்டத்தால் அலைமோதியதுடன், கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
இந்நிலையில், மதிய நேரத்தில் நிலவிய சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் மற்றும் கட்டுக்கடங்காத மக்கள் கூட்டத்தின் நெரிசல் காரணமாக, முதலமைச்சர் விஜய்யை வழிநெடுகிலும் நின்று பார்க்க முயன்ற பெண் ஒருவர் திடீரென நிலைதடுமாறி மயங்கி விழுந்தார். உடனே அங்கிருந்த த.வெ.க தொண்டர்களும், பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாரும் இணைந்து அந்தப் பெண்ணை மீட்டு, முதலுதவி வழங்கி சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் பெரம்பூர் பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
