பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பிலான 1.40 ஏக்கர் நிலத்தை, தவெக அரசு வெறும் 2 கோடி ரூபாய்க்குத் தாரை வார்த்துள்ளதாகக் கூறி திமுக ஐ.டி. விங் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளது.

பூங்கா சாலையில் அமைந்திருந்த இந்த நிலம், கடந்த கால சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு திமுக ஆட்சியின் போது மீட்கப்பட்டு வாகன நிறுத்தமாகப் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது முறைகேடாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 6-ம் தேதி, இணை சார்பதிவாளர் பணி மாறுதலான அந்த ஒருநாள் இடைவெளியைத் தந்திரமாகப் பயன்படுத்தி, நீதிமன்ற உத்தரவுகளையும் மீறி இந்த நிலப் பரிமாற்றம் நடந்துள்ளதாகவும், இதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிக்குப் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளதாகவும் திமுக சுட்டிக்காட்டியுள்ளது.

“கேமரா முன்னால் ரீல்ஸ் எடுத்து நாடகமாடும் அமைச்சர் ரமேஷ், திரைக்குப் பின்னால் நிலத் தரகராகச் செயல்படுகிறார்” என்று விமர்சித்துள்ள திமுக, ஆன்மீக பக்தர்கள் இதை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என எச்சரித்துள்ளது.