தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) அண்மைக்கால அரசியல் நகர்வுகள் குறித்து அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “அ.தி.மு.க-வின் கடைசித் தொண்டன் இருக்கும் வரை இந்த இயக்கத்தைத் தொட்டுக்கூடப் பார்க்க முடியாது. தற்போது தேர்தலில் வென்று ஆட்சி அமைத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்திற்கு முறையான உட்கட்சி கட்டமைப்பே கிடையாது” என்று மிக ஓப்பனாகத் தாக்கிப் பேசியுள்ளார்.
மேலும், அ.தி.மு.க-வில் இருப்பது போன்ற ஒரு வலுவான அரசியல் கட்டமைப்பை உருவாக்க ஒரு புதிய கட்சிக்கு ஆயிரம் ஆண்டுகள் ஆகும் என்று சுட்டிக்காட்டிய ஆர்.பி.உதயகுமார், “தங்களுக்குக் கட்டமைப்பு இல்லாததால், அடுத்த கட்சியின் உழைப்பில் உருவான கட்டமைப்பை ஆட்டைய போடலாம் என்று முதலமைச்சர் விஜய் தற்போது தீவிரமாக முயன்று வருகிறார்” எனப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் த.வெ.க-வில் இணையப் போவதாக வெளியாகும் தகவல்களுக்கு மத்தியில், முதலமைச்சர் விஜய்யை வம்புக்கு இழுக்கும் வகையில் ஆர்.பி.உதயகுமார் பேசியுள்ள இந்த ஆவேசப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
