ஹைதராபாத்தில் கின்னஸ் சாதனை முயற்சியின் பெயரில், ஆறு வயது சிறுமியைப் பொதுச் சாலையில் கார் ஓட்ட அனுமதித்த காவல் துறை சப்-இன்ஸ்பெக்டர் பூசாரி திருப்பதி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிறுமிக்குக் கார் ஓட்டப் பயிற்சி அளிப்பதாகக் கூறி, பரபரப்பான போக்குவரத்து நிறைந்த சாலையில் ஸ்டியரிங்கைக் கொடுத்து அவர் அலட்சியமாகச் செயல்பட்டுள்ளார்.
இந்த ஆபத்தான செயலால் போக்குவரத்து விதிகளை மீறியதுடன், பொதுமக்களின் பாதுகாப்பையும் அவர் கேள்விக்குறியாக்கியுள்ளார். இது குறித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, சப்-இன்ஸ்பெக்டர் பூசாரி திருப்பதி தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும், பாதுகாப்பு விதிமீறல் மற்றும் கவனக்குறைவாகச் செயல்பட்டதற்காக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
