உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் குடும்பப் பாசத்தையும் தாண்டி அரங்கேறியுள்ள ஒரு கொடூரச் சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்குச் சென்ற தன் மனைவியை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வர வேண்டும் என்பதற்காக, பெற்ற தாயின் உணவிலேயே விஷம் கலந்து கொடுத்துக் கொல்ல முயன்ற மகனைப் போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். உணவைச் சாப்பிட்ட தாய் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, உயிருக்குப் போராடி வருகிறார்.
கைது செய்யப்பட்ட மகனிடம் போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில், திடுக்கிடும் வாக்குமூலத்தை அவர் அளித்துள்ளார். தன் மனைவியை மீண்டும் குடும்பம் நடத்த அனுப்ப வேண்டும் என்றால், அதற்கு அவரது மாமியார் ஒரு கொடூர நிபந்தனை விதித்துள்ளார். “உன் மனைவி உன்னோடு வர வேண்டும் என்றால் முதலில் உன் தாய்க்கு விஷம் வைத்துக் கொல்ல வேண்டும்” எனக் கூறி, அவரே விஷ மாத்திரைகளையும் வாங்கிக் கொடுத்ததாக அந்த நபர் போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். மனைவியின் மீதான மோகத்தால் மாமியாரின் பேச்சைக் கேட்டுப் பெற்ற தாயையே கொல்லத் துணிந்த மகனின் இந்தச் செயல் ஆக்ராவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
